UAE Tamil Web

அமீரகத்தின் புதிய தொழிலாளர் நலச் சட்டம் : இதனால் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன?

worker

அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் புதிய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டமான அரசாணை 33 (2021) ஐ நேற்று வெளியிட்டார்.

இதனையடுத்து நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமீரக மனிதவள மேம்பாடு மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சர் டாக்டர் அப்துல் ரஹ்மான் அல் அவார் அடுத்தாண்டு புதிய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வரும் எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்தச் சட்டம் பிப்ரவரி 2, 2022 ஆம் தேதிமுதல் அமீரகத்தில் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் உறவுகளை நெகிழ்வுத் தன்மையுடையதாக மாற்ற இச்சட்டம் துணை புரியும் என அப்துல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தாக்குதல், துன்புறுத்துதல் ஆகியவற்றிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்க இச்சட்டம் நிச்சயம் வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டத்திற்குப் புறம்பாக தொழிலாளர்களின் ஆவணங்களை கையகப்படுத்துதலையும் இதன்மூலம் கட்டுப்படுத்த முடியும் என அப்துல் பேசுகையில் குறிப்பிட்டார்.

தொழிலாளர் உறவுகள், தனியார் துறையில் உள்ள ஊழியர்கள் பகுதி நேரமாகவோ, தற்காலிகமாகவோ அல்லது நெகிழ்வாகவோ வேலை செய்ய வழிவகை செய்தல் ஆகியவற்றை இச்சட்டம் மேம்படுத்த இருக்கிறது.

இச்சட்டம் பகுதி நேர வேலை செய்யும் பணியாளர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முதலாளிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மணிநேரம் அல்லது வேலைக்குத் திட்டமிடப்பட்ட நாட்களுக்கு வேலை செய்ய அனுமதிக்கிறது.

தற்காலிக வேலை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான ஒப்பந்தமாக இருக்கலாம் அல்லது வேலை முடிந்தவுடன் முடிவடையும் திட்ட அடிப்படையில் இருக்கலாம்.

நெகிழ்வான வேலை (Flexible Work), தொழிலாளர் சந்தையில் தற்போது நடைமுறையில் உள்ள முழுநேர வேலைக்கு கூடுதலாக, வேலையின் நிபந்தனைகள் மற்றும் தேவைகளைப் பொறுத்து வெவ்வேறு நேரங்களில் வேலை செய்வதற்கான சுதந்திரத்தை ஊழியர்களுக்கு வழங்குகிறது.

புதிய சட்டத்தின் கீழ் உள்ள இந்த ஒப்பந்தத்தில் வேலை வழங்குபவர் தேவைப்படும் வேலை அளவு, பொருளாதார நிலை மற்றும் செயல்பாட்டு அளவு ஆகியவற்றைப் பொறுத்து வேலை நேரத்தை தீர்மானிக்கலாம்.

காண்ட்ராக்ட் முடிவடைந்த நிலையில் உள்ள தொழிலாளர்களை வேலைக்கு எடுத்துக்கொள்வதை இச்சட்டம் அனுமதிக்கிறது. விதிமுறைகளுக்குட்பட்டு இது ஏற்கனவே அமீரகத்தில் நடைமுறையில் இருக்கிறது. தொழிலாளர்களின் பன்முகத் திறமைகளை நிறுவன உரிமையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளவும் இச்சட்டம் வழிவகுக்கிறது.

அதேபோல, தொழிலாளர்களுக்கு காண்ட்ராக்ட் முடிவடைந்தவுடன் சேரவேண்டிய கிராஜுவிட்டி உள்ளிட்ட மொத்த தொகையையும் நிறுவனம் அளிக்க வேண்டும். இதற்கான நெறிமுறைகளை இச்சட்டம் விளக்குகிறது.

சட்ட சலுகைகள்

தொழிலாளர்கள் மற்றும் அவரது வாரிசுகள் வேலை ரீதியிலான சட்ட வழக்குகளுக்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை (செலவு ஒரு லட்சம் திர்ஹம்ஸ்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்)

பாதுகாப்பு

சட்டத்தின் ஆர்ட்டிகிள் 72ன் படி, தொழிலாளர்களின் விருப்பத்திற்கு மாறாக அவரை வேறு பணிகளில் ஈடுபட கட்டாயப்படுத்தவோ மிரட்டவோ கூடாது என நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முதலாளி அல்லது நிறுவன மேலதிகாரிகள் பேச்சு அல்லது உளவியல் அல்லது செய்கை மூலமாக தொழிலாளருக்கு பாலியல் தொல்லை கொடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதுகிறது இச்சட்டம்.

அதேபோல, தொழிலாளரின் நிறம், பாலினம், இனம், மொழி, சமூக குழு ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபாடு காட்டக்கூடாது. இவை சம வாய்ப்புக்கான சாத்தியக்கூறுகளை பலவீனப்படுத்தும், வேலைவாய்ப்பில் சமமான அணுகல் அல்லது தொடர்ச்சி மற்றும் உரிமைகளை அனுபவிப்பதில் பாரபட்சம் ஏற்படுத்தும் என சட்டம் குறிப்பிடுகிறது.

ஒரே வேலை செய்யும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனவும் இச்சட்டம் வலியுறுத்துகிறது. இதற்கான வழிமுறைகளை அமைச்சர்கள் வெளியிடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சேர்ப்புக்கான கட்டணம் மற்றும் செலவுகளை ஏற்கும் பொறுப்பை முதலாளியிடம் வழங்குவதுடன், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொழிலாளியிடம் இருந்து இப்பணத்தை வசூலிக்கக் கூடாது என சட்டம் குறிப்பிட்டுள்ளது.

விடுமுறை

பிரசவகால விடுப்புகள், பெற்றோர் விடுப்பு தவிர்த்து 3-5 நாட்களுக்கு உறவுமுறை பொருத்து இரத்த சொந்தங்களின் இறப்புக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும்.

பெண்களுக்கு பேறுகால விடுப்பில் 45 நாட்களுக்கு முழு சம்பளமும் 15 நாட்களுக்கு அரை சம்பளத்துடனும் கொடுக்க வேண்டும். முதல் பிரசவத்தில் தாய்க்கோ அல்லது பிள்ளைக்கோ இக்காலத்திற்கு பிறகும் மருத்துவ உதவி தேவைப்பட்டால் 45 நாட்கள் சம்பளமில்லாத விடுமுறை அதற்கான அத்தாட்சிகளை சமர்ப்பித்து எடுத்து கொள்ளலாம்.

சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்க்கு பிரசவ விடுமுறைக்கு பிறகு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அதற்கு பின்னர் சம்பளமில்லா 30 நாட்கள் விடுப்பு எடுத்து கொள்ளலாம்.

அமீரகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் தொழிலாளர்கள் பணியில் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் வருடத்திற்கு 10 நாட்கள் படிப்பதற்காக விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்.

தொழிலாளர்களுக்கு சொந்தமான பாஸ்போர்ட் போன்ற உத்தியோகபூர்வ ஆவணங்களை நிறுத்தி வைப்பதையும், வேலை ஒப்பந்தத்தின் முடிவில் தொழிலாளரை நாட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்துவதையும் சட்டம் தடை செய்கிறது. தொழிலாளர் சந்தையில் உள்ள வேறொரு நிறுவனத்திற்கு தொழிலாளி செல்ல அனுமதிக்க இது உதவுகிறது.

அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளின்படி மற்றும் இந்த ஆணை-சட்டத்தின் நிர்வாக ஒழுங்குமுறைகளால் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகள் மற்றும் நடைமுறைகளின்படி உரிய தேதியில் தனது ஊதியத்தைப் பெற தொழிலாளிக்கு உரிமை உண்டு.

பணி மற்றும் ஊதியம்

15 வயதுக்குக் குறைவானவர்களை பணியில் அமர்த்தக்கூடாது. பகுதி நேர வேலையில் சேர இவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால் கீழ்க்கண்ட விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும்.

பதின்ம வயதினரை அவரது பெற்றோர் அல்லது காப்பாளர் ஒப்புதலுடன் 6 மணி நேரத்திற்கு மிகாமல் பணியில் அமர்த்தலாம். 1 மணிநேர ஓய்வு இதில் கட்டாயம் வழங்கவேண்டும்.

பதின்ம வயதினர் இரவு 7 மணிமுதல் காலை 7 மணிவரையில் இருக்கும் வேலைகளிலோ அல்லது அவர்களது ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும் விதமான வேலைகளில் அமர்த்தக்கூடாது.

5 மணி நேரத்திற்கு மேல் ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்யக்கூடாது. ஒரு மணிநேர ஓய்வு கட்டாயம். ஓவர்டைம் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் கொடுக்ககூடாது.

இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஓவர்டைம் தேவையெனில் ஒரு மணி நேரத்திற்கு உள்ள கூலியில் 25% அதிகமாக கூலி கொடுக்கவேண்டும். இரவு 10 முதல் அதிகாலை 4 மணி வரை பணிபுரிபவர்களுக்கு மேலுள்ளபடி 50% அதிகமாக கொடுக்கவேண்டும். ஷிஃப்ட் அடிப்படையில் பணிபுரிபவர்களுக்கு இவ்விதிமுறை பொருந்தாது. விடுமுறை நாட்களில் தொழிலாளர்கள் பணிபுரிந்தால் ஒரு நாள் விடுமுறையோ அல்லது 50% அதிக சம்பளமோ கொடுக்கவேண்டும்.

worker
57 Shares
Share via
Copy link