நோன்பு என்பது ஒவ்வொரு இஸ்லாமியரின் கடமையாகவே கருதப்பட்டு வருகின்றது. நோன்பு இருப்பது என்பது அல்லாஹ்வின் மீது அதிக ஈடுபாடு கொண்டு, அவரின் விருப்பத்திற்கு கீழ்ப்படிந்து நேர்மையான முறையில் பின்பற்றி அவரின் கருணையை பெற மேற்கொள்ளப்படும் ஒரு செயலாக கருதப்பட்டு வருகின்றது.
ஒவ்வொரு வருடமும் இந்த நோன்பினை மேற்கொள்ளும் பொழுது நோன்பு ஏற்பவரின் மனம் மற்றும் உடல் நன்கு வலிமை கொள்ளும் என்பதே நோன்பின் நம்பிக்கை.
நோன்பு மேற்கொள்ளும் போது நம்மை அறியாமல் சில தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பெரிய தவறிழைத்து விட்டோமா என்று நாமே சில சமயம் வருந்துவதுண்டு. நோன்பின் போது மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் என்னென்ன என்பதை ஒரு பார்வையாக பார்க்கலாம்.
நோன்பு ஆரம்பிக்கும் முறை
நோன்பை ஆரம்பிக்கும் முன்பு வெறும் வயிற்றில் ஆரம்பிக்கக் கூடாது. நோன்பு மேற்கொள்ளும் முன் சகர் உணவை கட்டாயம் சாப்பிட வேண்டும். அதாவது தொழுகை ஆரம்பிக்கும் முன்பு உணவினை உண்டு விட வேண்டும்.
இப்தார்
நாம் எப்படி நோன்பு ஆரம்பிக்கும் முன்பு உணவினை உண்டு முடிக்கின்றோமோ அதே போல் சூரியன் அஸ்தமனம் ஆன உடனே தாமதிக்காமல் நோன்பினை முடிக்க வேண்டும்.
சாப்பிடும் முறை
நோன்பின் போது நம்மை அறியாமல் தண்ணீர் மற்றும் உணவு உட்கொள்வது தவறாக கொள்ளாது .ஆனால் தெரிந்தே தண்ணீர் மற்றும் உணவு உட்கொள்வது நோன்பை முறிப்பதாகவே கருதப்படும்.
மாதவிடாய்
நோன்பின் போது மாதவிடாய் ஆரம்பித்து விட்டால் நோன்பினை மேற்கொள்ளக் கூடாது. சிறுதுளி ரத்தக்கசிவு தென்படுகிறது என்றாலும் நோன்பினை மேற்கொள்ளக்கூடாது. முழுதாக மாதவிடாய் சுழற்சி முடிந்த பின்பே நோன்பினை மேற்கொள்ள வேண்டும்.
உணவினை சுவைத்தல்
குடும்பத்தாருக்கு உணவு சமைக்கும் பொழுது பொதுவாக நோன்பு உணவினை உட்கொள்ளக்கூடாது என்பது விதிமுறை. உணவின் சுவைக்காக சோதித்துப் பார்க்கலாம் ஆனால் உணவினை சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்துடன் அதனை விழுங்கக்கூடாது. முக்கியமாக சுவை பார்த்த பின்னால் வாயை நீரால் கழுவ வேண்டும்.
குளியல்
நோன்பு இருக்கையில் வாயினை கொஞ்சமாக தண்ணீர் வைத்து கழுவுவது ஏற்றுக்கொள்ளப்படும்குளிப்பது ஏற்றுக்கொள்ளப்படும். கண்ணுக்கு மை மற்றும் மருந்து போடலாம்.மேலும் உடல் நலக்குறைவுக்காக மாத்திரை தவிர்த்து ஊசியாக போட்டுக் கொள்ளலாம்.
நோயாளிகள்
முக்கியமான பயணத்தை மேற்கொள்ள நேரிட்டாலோ அல்லது நோய்வாய் பட்டாலோ நோன்பினை கடைபிடிக்காமல் இருக்க விதிமுறை உண்டு ஆனால் உடல்நிலை குணமான பின்பு மற்றும் பயணத்தினை முடித்த பின்பு நோன்பை தொடர வேண்டும்.
முதியவர்கள்
வயது முதுமையினாலோ அல்லது நிரந்தர நோயினாலோ நோன்பு வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் எத்தனை நாட்களுக்கு நோன்பு வைக்கவில்லை என்பதை கணக்கிட்டு பார்த்து அத்தனை நாட்களுக்கு ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அதாவது நாள் ஒன்றுக்கு ஒரு ஏழைக்கு உணவு என்ற கணக்கெனில் உணவினை அளிக்க வேண்டும்.
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் நோன்பினை வைக்க முடியாத சூழல் ஏற்பட்டால் அதேபோன்று ஏழைகளுக்கு உணவினை தானமாக அளிக்கலாம்.
எதிர்பாராமல் நாம் செய்யும் தவறுகளை தவிர்த்து முழுமையான மனதுடன் அல்லாவின் அருளை பெற வேண்டும் என்று முறையாக விரதத்தை மேற்கொண்டால் அல்லாஹ்வின் அருள் நமக்கு கிடைக்கும் என்பது உறுதி.