UAE Tamil Web

திருவள்ளுவர் தினம் – காவி உடையணிந்த வள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்த துபாயில் உள்ள இந்திய தூதரகம்!

திருவள்ளுவர் தினத்தையொட்டி, காவி உடையணிந்த வள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்த துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் செயல் பேசு பொருளாகியுள்ளது.

உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2ம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒன்றரை அடிகளில் வாழ்வியலுக்கு தேவையான வழிகளை போதித்தவர் திருவள்ளுவர்.

133 அதிகாரங்களில் ஒரு அதிகாரத்திற்கு 10 குறள் வீதம் 1330 குறள்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அறத்துப் பால், பொருட் பால், காமத்துப்பால் என மூன்றாக பிரித்து, தமிழர்களுக்கு மட்டுமல்லாது, உலகுக்கே விருந்தளித்துள்ளார் வள்ளுவர்.

இந்நிலையில், திருவள்ளுவர் தினத்தையொட்டி, வள்ளுவருக்கு பணிவான அஞ்சலியை செலுத்துவதாக, துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தத்துவஞானி, புகழ்பெற்ற துறவி மற்றும் மதிப்பிற்குரிய தமிழ்க் கவிஞரான திருவள்ளுவருக்கு பணிவான அஞ்சலியை செலுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், வாழ்வின் அனைத்து நிலைகளிலும் வழிகாட்டியாக ‘திருக்குறள்’ என்ற அழகிய பொக்கிஷத்தை நமக்கு திருவள்ளுவர், விட்டு சென்றுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவி உடையணிந்த வள்ளுவர் புகைப்படத்தை தமிழக பாஜகவின் சமூக ஊடகங்களில், 2019ல் பகிர்ந்திருந்தது, சர்ச்சையை கிளப்பியிருந்தது.

இந்நிலையில் திருவள்ளுவர் தினத்தையொட்டி, மீண்டும் அதே போன்ற புகைப்படத்தை  பகிர்ந்துள்ளது தமிழக பாஜக.


இந்த புகைப்படத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை கொடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவரின் புகைப்படங்கள் இத்தனை வருடங்கள் வெள்ளை உடையில் மட்டும்தான் இருந்தது. ஆனால் தமிழக பாஜக கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்கு காவி நிற உடை அணிவித்தது, மீண்டும் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதற்கு எதிராக இணையத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தமிழக பாஜக திருவள்ளுவரை அவமானப்படுத்திவிட்டது. அவருக்கும் கூட மத சாயம் பூசிவிட்டது என்று குறிப்பிட்டு பலர் இணையத்தில் தமிழக பாஜகவிற்கு எதிராக ட்விட் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், அதே காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் தான், தற்போது, துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது. இதுவும் தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap