UAE Tamil Web

அமீரகத்தில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள “பேய்களின் நகரம்” – 50 ஆண்டுகளாக தொடரும் மர்மம்..!

ABDANDONEDVILLAGE-ARAMZAN-23-(
5.9K Shares

ஷ்லோய்ம் சியோன்ஸ் என்னும் எளிதில் நம் வாய்க்குள் நுழையாத பெயரைக்கொண்ட அமெரிக்க வாழ் யூதர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமீரகம் வந்திருக்கிறார். புர்ஜ் கலீஃபா, கடற்கரைகள், பூங்காக்கள் என அமீரகத்தின் பிரபல சுற்றுலாத் தளங்களின் பட்டியலில் அவரை ஈர்த்தது பேய்களின் நகரம் என்றழைக்கப்படும் Ghost Town தான். இதனை உள்ளூர் வாசிகள் புதைந்துபோன நகரம் என்றும் அழைக்கிறார்கள்.

ஷார்ஜாவில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அல் மதாம் பகுதியில் இருக்கிறது இந்த பேய்களின் நகரம். அதனைக் காண கேமராவைத் தூக்கிக்கொண்டு தனியாளாக காரில் கிளம்பியிருக்கிறார். பேய்களின் நகரம் எங்கே இருக்கிறது எனக் கேட்க, நட்ட நடு பாலைவனத்தில் புள்ளி வைத்து பாதை காட்டியிருக்கிறது கூகுள்.

செல்போன் திரையில் தோன்றிய பாதையைத் தொடர்ந்து சென்றவரால் ஒரு கட்டத்திற்கு மேலே பயணிக்க முடியாமல் போயிருக்கிறது. அவரைத் தடுத்து நிறுத்தியது மணல். சாலைகள் முற்றுப்பெற்றிருக்கிறது. கூகுள் காட்டிய சிவப்புப் புள்ளியை அடைய நெடுந்தொலைவு இருந்திருக்கிறது. பாலைவன மணலில் ஓட்டிச்செல்லும் அளவிற்கு மேற்கண்ட ஆசாமி எடுத்துச்சென்ற வாகனத்தில் வசதியில்லை. மீறி ஓட்டினால் மீதியுள்ள தூரத்திற்கு நடராஜா சர்வீஸ் தான்.

நடந்துபோகலாம். ஆனால் ஷ்லோய்ம்க்கு அமீரகத்தின் உக்கிரமான வெப்பநிலையைக் கண்டு அச்சம். காத்திருக்கத் துவங்கினார். சரி, அவர் காத்திருக்கட்டும். அதுவரையில் நாம் கோஸ்ட் டவுன் எனப்படும் பேய்களின் நகரத்தைப் பற்றி கடந்த காலத்திற்குச் சென்று பார்த்துவிட்டு வரலாம்.

செழுமையான நாகரீகம்..

1970 அல்லது 1980 களில் இந்தப் பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளைக் கட்டிக்கொண்டு குடியேறத் துவங்கினர். ஹால், விருந்தினர் அறை, காற்றோட்டமுள்ள படுக்கையறை என வசதியான வீடுகள் அரசு அனுமதியுடன் கட்டி எழுப்பப்பட்டிருக்கின்றன. கூடவே தொழுகைக்காக மசூதியும்.

ஆனால் எல்லாம் கொஞ்சகாலம் தான். இங்கே குடியிருந்தவர்கள் வீட்டைக் காலி செய்துவிட்டு வேறு இடங்களுக்கு நகரத் துவங்கினர். இதற்குக் காரணம் என்ன என்பது தான் தற்போது மில்லியன் டாலர் கேள்வி.

-al-madam-village--cnn
Image Credit: CNN

மோசமான ஜின்

இஸ்லாமிய நம்பிக்கைப்படி ஜின்கள் எனப்படுபவை கண்ணுக்குப் புலப்படாத உயிரினம் ஆகும். இதில் நல்ல ஜின் கெட்ட ஜின் என இருவகை உண்டு. சரி இதற்கும் வீடுகளை மக்கள் காலி செய்வதற்கும் சம்பந்தம் என்ன? இருக்கிறது என சத்தியம் செய்கிறார்கள் உள்ளூர் பழங்குடி மக்கள்.

இந்தப் பகுதியில் அல் கட்பி என்னும் பழமையான அமீரக குடிமக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இப்பகுதியில் வாழ்ந்த 3 பெரும் பழங்குடிகளில் அல் கட்பியும் ஒன்று. கெட்ட ஜின் தான் இங்கு வாழ்ந்த மக்களை வெளியேற்றியது என உள்ளூர் வாசிகள் சொல்கிறார்கள்.

madam-ghost-town cnn
Image Credit: CNN

அருகில் இருக்கும் பாலைவனம் டன் கணக்கில் மணலைக் கொண்டுவந்து கொட்டியது தான் காரணம் என்கிறார்கள் இன்னொரு தரப்பினர். இரண்டில் எது உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் எல்லா வீடுகளுக்கு உள்ளேயும் மணல் ஆளுயரத்திற்கு கொட்டிக்கிடப்பது மட்டும் உண்மை.

பாலைவனம் தன்னுடைய மணற் கைகளால் இந்த கிராமத்தை இறுக்கமாக அணைத்திருக்கிறது. எந்த வீட்டிலும் தரைப்பகுதியைக் காண முடியாத அளவிற்கு மணல் மலையெனக் குவிந்திருக்கிறது. காலப்போக்கில் இந்த இடத்தை அனைவரும் மறக்கத் தொடங்கிவிட்டனர். இங்கிருந்தவர்கள் பற்றிய வரலாறும் அந்த பாலைவன மண்ணிற்குள் புதைந்து போனது.

சரி, தூரத்தில் காத்திருந்த ஷ்லோய்ம் என்ன ஆனார் எனப் பார்ப்போம்.

பாலைவன விருந்து

என்ன செய்வதென்று தெரியாமல் பராக் பார்த்துக்கொண்டிருந்த வேளையில் தூரத்தில் ஷ்லோய்மை நோக்கி ஒரு வாகனம் வந்திருக்கிறது. SUV கார். யார்? எதற்கு? ஏன்? என்ற கேள்விகளுக்குப் பின்னர் தான் உதவி செய்வதாகவும் தன்னுடன் வரும்படியும் தெரிவித்திருக்கிறார் உள்ளூர் இளைஞரான அல் கட்பி.

மஜ்லிஸ் எனப்படும் ஓய்வெடுக்கும் வண்ண விரிப்புகளுடன் கூடிய இடத்திற்கு ஷ்லோய்மை அழைத்துச் சென்றிருக்கிறார் கட்பி. அங்கே அவருக்கு அமீரக பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அராபிக் ஔத் (Arabic oud) எனப்படும் வாசனைப்பொருளை கட்பி, ஷ்லோய்ம்க்கு பரிசாகக் கொடுத்திருக்கிறார்.

சிறிதுநேர ஓய்விற்குப் பிறகு, புதைந்துபோன நகரத்திற்கு ஷ்லோய்மை அழைத்துச் சென்றிருக்கிறார் கட்பி. இருவரும் தங்களது போன் நம்பர்களை பரிமாறிக்கொண்டிருகின்றனர். தற்போது இருவரும் நண்பர்களாகிவிட்டனர்.

Ghost Village
Image Credit: Khaleej Times

ஷ்லோய்ம் ஒரு யூடியூப் பிரபலம் என்பதை உங்களுக்குச் சொல்ல மறந்துவிட்டேன். போலவே அவர் ஒரு எழுத்தாளர் என்பதையும். தனது அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பிய ஷ்லோய்ம் ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அமீரகத்திற்கு வந்தது – புதைந்துபோன நகரம் – கார் மணலில் சிக்கியது – கட்பி என எல்லாவற்றையும் விரிவாக அதில் பதிவு செய்து யூடியூபில் வெளியிட தற்போது அந்த வீடியோ வைரலாகியிருக்கிறது.

அமீரகத்தின் விருந்தோம்பல் பண்பு, ஈகைக் குணம் போன்றவற்றை தான் மதிப்பதாகவும், அமீரக குடிமக்கள் மிகச்சிறந்த பண்பாளர்கள் எனவும் ஷ்லோய்ம் தனது வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார்.

துணைப் பிரதமரின் பாராட்டு

ஷ்லோய்ம்க்கு அடைக்கலம் கொடுத்து அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்த அல் கட்பியை அமீரகத்தின் துணைப் பிரதமரும் உட்கட்டமைப்புத்துறை அமைச்சருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷேக் சைஃப் பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Saif bin Zayed Al Nahyan) தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியிருக்கிறார்.

ஷ்லோய்ம் வெளியிட்ட வீடியோவை ட்விட்டரில் பார்த்த துணைப் பிரதமர்,” அமீரகத்திற்கு அனைவரையும் வரவேற்கிறோம். நேர்மறையான சிந்தனைகளைக்கொண்ட அமீரக குடிமக்களுக்கு வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஷார்ஜாவில் இருக்கும் அல் மதாம் பகுதியில் உள்ள புதைந்துபோன நகரத்தை வாய்ப்புள்ளவர்கள் சென்று பார்த்துவாருங்கள். நிச்சயம் நல்ல அனுபவம் உங்களுக்குக் கிடைக்கும்.

5.9K Shares
5.9K Shares
Share via
Copy link
Powered by Social Snap