UAE Tamil Web

துபாய் ஆட்சியாளரின் தத்ரூப மெழுகுசிலையை உருவாக்கிய இந்தியருக்கு குவியும் பாராட்டுக்கள்..!

Kerala-sculptor-V.S.-Harikumar-Kumily-Sheikh-Mohammed-Bin-Rashid-Al-Maktoum

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற இடம் குமுளி. இங்குள்ள ரோஸ் கார்டனில் அமைந்துள்ளது V.S.ஹரிகுமார் என்னும் கலைஞரின் மெழுகுசிலை மியூசியம். சுவாமி விவேகானந்தர், மார் தோமா சிரியன் சர்ச்சின் பாதிரியார் பிலிப்போஸ் மார் க்ரிசோஸ்தம் போன்ற சமய தலைவர்கள் முதல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மலையாள நடிகர் மோகன்லால், மறைந்த அமெரிக்க பாடகர் மைக்கில் ஜாக்சன் என ஹரிகுமார் உருவாக்கியுள்ள புகழ்பெற்ற மனிதர்களின் சிலைகள் ஏராளம்.

- Advertisment -

இவற்றுள் இந்தவருடம் அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவருடைய மெழுகு சிலையை ஹரிகுமார் உருவாக்கியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது சிற்பங்களுக்கு இடையே துபாய் ஆட்சியாளரின் சிலையானது வைக்கப்பட்டுள்ளது.

மிகவும் பிடித்த தலைவர்

துபாய் ஆட்சியாளரை சிலை வடித்ததன் காரணம் குறித்து கேட்கப்பட்டபோது,” நான் இதுவரையில் துபாய்க்குச் சென்றதில்லை. ஆனால் அவரைப்பற்றி (துபாய் ஆட்சியாளர்) நிறையவே கேள்விப்பட்டிருக்கிறேன். குடிமக்களை சரிசமமாக அவர் நடத்தும் விதம் என்னை ஈர்த்தது. குறிப்பாக அவர் மனிதநேயமும் அன்பும் கொண்ட மனிதர்” என ஹரிகுமார் தெரிவித்தார்.

அவரது இளைய சகோதரர் உட்பட அமீரகம் வந்து சென்றவர்கள் அளித்த துபாய் ஆட்சியாளர்கள் பற்றிய பல தகவல்களை ஹரிகுமார் கேட்டறிந்துள்ளார். அதுவே அவரைத் தூண்டியுள்ளது.

Modi-Sheikh-Mohammed_
Image Credit: Gulf News

கடந்த 2017 ஆம் ஆண்டு தனது படைப்புகளுடன் துபாய் வரும் வாய்ப்பு ஹரிக்குக் கிடைத்திருக்கிறது. இருப்பினும் தனது பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டதை அறியாததால் அவரால் பயணம் மேற்கொள்ள முடியாமல் போயிருக்கிறது.

கலைப் பித்து

பெற்றோர், மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் சகோதரரின் குடும்பம் என கூட்டுக்குடும்பமாக வசித்துவரும் ஹரிகுமார் பல்வேறு பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் தான் தனது கலையை, ஜீவனின் ஊற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். “ஒரு சிலையை செய்ய சராசரியாக 1.5 லட்சம் ரூபாய்கள் வரை ஆகும். குறைந்தபட்சமாக இரண்டு மாதங்கள் தேவைப்படும்” எனச் சொல்லும் ஹரியை பலரும் பைத்தியக்காரன் என வசைபாடியுள்ளதாக அவரே சொல்கிறார்.

சிலைகளின் நேர்த்திக்காக உண்மையான மனிதர்களின் முடிகளை ஹரி பயன்படுத்துகிறார். இதற்காக இவரது நண்பர்கள் தங்களது முடிகளை தானமாக அளிக்கிறார்கள். குமுளியில் உள்ள இவரது மியூசியத்திற்கும் கொரோனா காரணமாக மக்கள் வருகை குறைந்துவிட்டது. இருப்பினும் ஆங்காங்கே நடைபெறும் கண்காட்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குச் சென்று தனது பொருளாதாரத் தேவையை ஓரளவு பூர்த்தி செய்துகொள்கிறார் ஹரி.

எனக்கு யாரும் போஸ் கொடுக்கமாட்டார்கள்

“மேற்கத்திய மெழுகுசிலை கலைஞர்கள் தாங்கள் செய்யும் நபர்களின் மாடல்களை அருகில் வைத்திருப்பார்கள். ஆனால் தனக்கு அப்படியேதும் கிடைப்பதில்லை. எந்த நபரும் எனக்காக போஸ் கொடுக்கமாட்டார்கள். இதனால் அவர்களது புகைப்படங்களை மட்டுமே வைத்து நான் சிலைகளை உருவாக்குகிறேன்” என ஹரி தெரிவித்தார்.

மெழுகுசிலை தயாரிப்பு குறித்து எவ்வித படிப்பும் கேரளத்தில் இல்லை. ஆர்வம் ஒன்றுதான் அதைக்கற்றுக்கொள்ள ஒரே வழி ஆனால் அதற்கு அபாரமான பொறுமையும் கலையின் மீதான பற்றும் அவசியம் என்கிறார் ஹரி.

சிதலமடைந்த வீட்டை புனரமைக்காமல் மெழுகுச் சிலைகளை செய்வது குறித்து பலரும் கேலியும் கிண்டலுமாக பேசுவதைத் தான் கேட்டிருப்பதாக ஹரி தெரிவித்தார். இருப்பினும் ஒரு உண்மையான கலைஞனால் ஒருபோதும் தனது கலையை விட்டுத்தர முடியாது. எத்தனை துயர் எதிர்வரினும் கலைஞர்கள் அப்படியேதான் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள்.இருப்பார்கள். ஹரியைப் போல.