UAE Tamil Web

அமீரகத்தில் வேலை தேடுபவர்களுக்கு ஒரு நற்செய்தி : இந்த வருடம் அதிகமானோரை பணிக்கு எடுக்க இருப்பதாக 74% நிறுவனங்கள் அறிவிப்பு..!

STOCK-FAKE-JOBS-

அமீரகம் முழுவதிலும் உள்ள முக்கிய பல நிறுவனங்கள் இந்த வருடம் புதிய ஆட்களை வேலைக்குச் சேர்க்க இருப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய வேலைவாய்ப்பு மற்றும் பணியாட்கள் தேர்வு ஆகியவற்றைக் கவனிக்கையில் ரிஸ்க் மேனேஜ்மென்ட், டிஜிட்டல் துறைகள் மற்றும் நிதி ஆலோசனை ஆகிய துறைகள் எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. கொரோனா தாக்கத்தினால் பல்வேறு திறமைசாலிகளுக்கான தேவை ஏற்பட்டிருக்கும் மருத்துவமனை, விமானப் போக்குவரத்துறை, ஓய்விடங்கள் ஆகியவை மீண்டும் உத்வேகம் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Bayt இணையதளத்தின் மனிதவள மேம்பாட்டுக்கான இயக்குனர் ஓலா ஹதாத் இதுபற்றிப் பேசுகையில்,”கொரோனா அனைத்துத் துறைகளையும் தீவிரமாக பாதித்தது என்பது மறுக்க முடியாத உண்மை. இருப்பினும் நிலைமை தற்போது சீரடைந்துவருகிறது. 2021 ஆம் ஆண்டு வேலை தேடுபவர்களுக்கு குறிப்பாக அமீரகத்தில் இருப்பவர்களுக்கு நிச்சயம் ஒளிமிக்க ஆண்டாக இருக்கும். Bayt நிறுவனம் சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பின்படி அமீரகத்தில் உள்ள 74% முதலாளிகள் தங்களது நிறுவனங்களுக்கு புதிய வேலையாட்களை பணியமர்த்த இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்” என்றார்.

இந்த கணக்கெடுப்பின்படி முதல்நிலை ஊழியர்களான ஜூனியர் எக்ஸிகியூடிவ் முதல் சேல்ஸ் எக்ஸிகியூடிவ், வரவேற்பரையாளர், விற்பனை மேலாளர் முதலிய பணிகளுக்கு அதிகளவில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இது ஒருபுறம் என்றால் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கப் பகுதிகளில் எண்ணெய் / எரிவாயு / பெட்ரோ கெமிக்கல்ஸ், விளம்பரம் / சந்தைப்படுத்தல் / மக்கள் தொடர்பு மற்றும் பொறியியல் / வடிவமைப்பு துறைகள் ஆகியவற்றில் இந்தாண்டு வேலையாட்கள் தேர்வு மிக அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

மைக்கல் பேஜ் நிறுவனத்தின் மத்திய கிழக்குப் பகுதியின் இயக்குனர் ஜோன் எடி இதுபற்றிப் பேசுகையில்,” அமீரகத்தில் பணியாளர் தேர்வைப் பொறுத்தவரை 2021 ஆம் ஆண்டு எப்படியிருக்கும் எனக்கூற முடியாது. ஆனால் ஒன்றை என்னால் தீர்க்கமாக சொல்ல முடியும். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னால் இருந்த சூழ்நிலை கடந்த இரண்டு காலாண்டுகளில் சீரடைந்திருக்கிறது” என்றார்.

ஆட்சேர்ப்பு கொரோனாவுக்கு முன்னர் இருந்ததைப் போல இன்னும் நடைபெறவில்லை எனினும், வார மற்றும் மாத ஊதியங்களைப் பெறும் துறைகளைக் கண்காணிக்கையில் 2020 ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டு மற்றும் 2021 ன் முதல் காலாண்டு நம்பிக்கை அளிக்கும் வகையிலேயே இருந்திருக்கிறது மேலும் இந்தாண்டின் இரண்டாம் காலாண்லும் இதே நிலை தொடரும் என எடி தெரிவித்தார்.

பாரம்பரிய துறைகளான சில்லறை விற்பனை, விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா ஆகியவை 2020 ஆம் ஆண்டில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டன. தொற்றுநோய்க்கு முன்பே சில்லறை வர்த்தக பிராண்டுகள் ஆன்லைன் வர்த்தகத்தினால் பாதிப்பைச் சந்தித்தன. இருப்பினும் தற்போது அவை பிரகாசமான பாதைக்குத் திரும்பியுள்ளன. அமீரகத்தில் வேகமாக அளிக்கப்பட்டுவரும் கொரோனா தடுப்பூசி இந்நிலையை மேலும் மேம்படுத்தும் என எடி குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில்,” கொரோனா காரணமாக டிஜிட்டல், டெக்னாலஜி, வாழ்க்கை அறிவியல், திட்ட மேலாண்மை மற்றும் தொலைத்தொடர்பு ஆகிய துறைகள் முன்னேறியிருப்பதையும் மறுக்க முடியாது” என்றார்.

STOCK-FAKE-JOBS-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap