UAE Tamil Web

“சாப்பிடுவதற்குக் கூட எங்களிடம் பணமில்லை” – பாஸ்போர்டை பறிகொடுத்துவிட்டு அமீரகத்தில் தவிக்கும் இந்தியர்கள்..!

Indian Workers

கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் இருந்து பல கனவுகளுடன் அமீரகம் வந்த 8 இந்தியர்கள் உணவு, பணம் இல்லாமல் அமீரகத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீல நிறக் கழுத்துப்பட்டை தொழிலாளர்களான இவர்களிடத்தில் இருந்து தலா 30,000 திர்ஹம்ஸ் பணத்தை வாங்கிய ஏஜெண்ட் அவர்களிடமிருந்து பாஸ்போர்ட்டையும் வாங்கியிருக்கிறார்.

பணிக்குச் சேர இருக்கும் நிறுவனத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிடுவதாக ஏஜெண்ட் கூறியிருக்கிறார். இதனை நம்பி தொழிலாளர்களும் பாஸ்போர்ட்டை கொடுத்திருக்கிறார்கள்.

அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் தங்கும் இடங்களில் இவர்கள் தங்கியிருந்தாலும் பாஸ்போர்ட் சமர்ப்பிக்கப்படாததால் நிறுவனம் வேலை தர மறுத்திருக்கிறது. இதனால் அங்கிருந்து வெளியேறிய தொழிலாளர்கள் உணவு, தங்குமிடம் ஆகியவை கிடைக்காமல் கஷ்டப்பட்டுள்ளனர்.

வேறு இடத்தில் வேலைக்கு செல்லலாம் என்றால் பாஸ்போர்ட் இல்லாததால் அதற்கும் வாய்ப்பில்லாமல் போயிருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் தவிக்கும் வேளையில்தான் கிரண் என்னும் சமூக ஆர்வலர் இந்தத் தொழிலாளர்களை பார்த்திருக்கிறார்.

இதுகுறித்து உடனடியாக துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. ஏஜெண்ட்டை தேடும் பணியில் துணைத் தூதர அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஹிதாயத் அதூர் என்னும் சமூக நல ஆர்வலரிடம் இந்த விஷயத்தை கிரண் எடுத்துச்செல்லவே, பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்தை அளிக்க அவர் ஏற்பாடு செய்துள்ளார்.

ஏற்கனவே இந்தத் தொழிலாளர்களை வேலையில் எடுத்துக்கொள்ள இருந்த நிறுவனம், பாஸ்போர்ட் இருந்தால் மீண்டும் இவர்களுக்கு வேலைகளை அளிக்கிறோம் எனத் தெரிவித்திருக்கிறது.

மேலும் பல நிறுவனங்கள் இந்தத் தொழிலாளர்களை பணியில் சேர்த்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன. இருப்பினும் அவற்றிற்குத் தடையாக இருப்பது காணாமல்போன பாஸ்போர்ட் தான்.

இதுகுறித்துப் பேசிய பாதிக்கப்பட்ட தொழிலாலர்களுள் ஒருவரான ரைஜுல்லா தேவன்,” பணம், உணவு மற்றும் வேலை இல்லாமல் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்” என்றார்.

ஏஜெண்ட் சீக்கிரத்தில் பிடிபட்டால் இவர்களுடைய கஷ்டங்களும் முடிவிற்கு வந்துவிடும் என சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Indian Workers
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap