ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று நள்ளிரவில் அமீரகம் மீது ஏவுகணைகளை வீசி தாக்க முயற்சித்ததாகவும், அவற்றை இடைமறித்து அழித்ததாகவும் அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடான ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில், கடந்த 6 ஆண்டுகளாக அரசுக்கு ஆதரவாகவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் சவுதி தலைமையிலான கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று நள்ளிரவில் நடத்திய தாக்குதலின் ஏவுகணைகளை அல் ஜாஃப் என்ற இடத்தில் அமீரகத்தின் விமானங்கள் வானிலேயே இடைமறித்து அழித்ததாக அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுபோல கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமீரகத்தின் மீது தாக்குதல் நடத்த அனுப்பப்பட்ட ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து அமீரகம் அழித்தது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் 3-வது முறையாக ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அமீரகம் மீதான தாக்குதல் தடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 17 ஆம் தேதி அபுதாபி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இதனால் சவுதி தலைமையிலான படை, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது.