UAE Tamil Web

Friendship தான் சொத்து நமக்கு – அமீரகத்தில் முளைத்த நெகிழ்ச்சியான நட்பு!

பொதுவாக நோயாளி – மருத்துவர் உறவு என்பது மருத்துவமனையோடு நின்றுவிடும். ஆனால் அபுதாபியில் மருத்துவமனையையும் தாண்டி குடும்பத்தில் ஒருவராய் பழகும் அளவுக்கு மருத்துவர் – நோயாளியின் உறவு உன்னதமாய் வளர்ந்திருக்கிறது. இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஷோக் குமார் என்பவர் அபுதாபியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2017ம் ஆண்டு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அஷோக் குமார் உடனடியாக LLH Hopital Mussaffahவுக்கு விரைந்துள்ளார். அங்கு பணியில் இருந்த கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் ஜோஸ் ஜான், அசோக் குமாருக்கு ஆறுதல் கூறி அவரது சிகிச்சைக்கு அதிகம் உதவி செய்துள்ளார். உயர் சிகிச்சைக்காக அசோக் குமார் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றும்போதும் அவருடன் மனிதாபிமான அடிப்படையில் உடன் சென்றுள்ளார் மருத்துவர் ஜோஸ் ஜான். அது மட்டுமின்றி அசோக் குமாரை இரவு வரை பார்த்துக் கொண்டு மறுநாள் காலையிலேயே வந்து அவரது உடல்நலன் குறித்து விசாரித்ததும் அசோக் குமாருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவரின் பணி முடிந்தபிறகு அவர் காட்டிய அலாதியான அன்பும் பாசமுமே தனது வலியை மறக்கடிக்கச் செய்ததாக நெகிழ்ந்த அசோக் குமார், தனக்கு இரண்டாவது வாழ்க்கையை கொடுத்தது ஜான் தான் எனவும் உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் மருத்துவர் ஜானின் குடும்பத்தினரை நேரடியாகச் சந்தித்து நன்றி தெரிவித்ததோடு அவர்களுடன் நட்பாக பழகவும் ஆரம்பித்துவிட்டார் அசோக் குமார். விடுமுறை, பண்டிகை நாட்களில் இரு குடும்பத்தினரும் சந்தித்து விருந்து உண்ணத் தொடங்கியுள்ளனர். குடும்பத்தில் ஒருவராய் இப்போது சொந்தம் கொண்டாடும் அளவுக்கு மருத்துவர் ஜான் – அசோக் குமாரின் நட்பு உயர்ந்தோங்கிவிட்டது.

0 Shares
Share via
Copy link