UAE Tamil Web

துபாய் காவல்துறையின் சேலஞ்ச்: சிறந்த ஐடியா கொடுப்பவர்களுக்கு 25,000 திர்ஹம்ஸ் சன்மானம்..!

-dubai-police_

காவல்துறை சந்திக்கும் சவால்களை தீர்க்க உங்களிடம் ஐடியா இருக்கிறதா? அப்படியென்றால் உங்களுக்கு 25,000 திர்ஹம்ஸ் வரையில் சன்மானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆமாம். உண்மைதான். துபாய் காவல்துறை இன்னோவேஷன் பிளாட்ஃபார்ம் (Innovation Platform) என்னும் திட்டத்தைத் துவங்கியுள்ளது.

பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை, குற்றத்தடுப்பு மற்றும் வாடிக்கையாளர் மகிழ்ச்சி ஆகிய துறைகளில் காவல்துறை சந்திக்கும் சவால்களுக்கு சிறந்த ஐடியா அளிக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். இதற்கென உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக பிரிவு அதிகாரிகள் சமர்ப்பிக்கப்படும் ஐடியாக்களை ஆராய்ந்து, சிறந்தவைகளுக்கு தலா 25,000 திர்ஹம்ஸ் சன்மானம் வழங்கும்.

இதுகுறித்துப் பேசிய துபாய் காவல்துறையின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல்லா கலீஃபா அல் மெர்ரி ,”துபாய் காவல்துறையைப் பொறுத்தவரையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்போம். அதன்மூலமாக மட்டுமே சவால்களை புதிய வாய்ப்புகளாக மாற்ற முடியும்” என்றார்.

உங்களுக்கான சேலஞ்ச் துபாய் காவல்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நீங்களே உங்களுக்கானதை தேர்ந்தெடுக்கலாம்.

உங்களுக்கான சேலஞ்ச்கள்:

  • போதைப்பொருள் உபயோகிப்பின் மூலமாக ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  • டெலிவரி பைக்கில் செல்பவர்களை சாலை விபத்தில் இருந்து காப்பதற்கான திட்டங்கள்.
  • பொதுப் போக்குவரத்தில் நிகழும் சாலை விபத்துக்களை குறைப்பதற்கான திட்டங்கள்.
  • ஆன்லைன் மூலமாக மிரட்டி பணம் பறித்தல் மற்றும் இணையவழி துன்புறுத்தல்களை குறைப்பதற்கான திட்டங்கள்.

மேற்கண்ட ஒவ்வொரு சேலஞ்ச்-ற்கும் தலா 25,000 திர்ஹம்ஸ் சன்மானம் வழங்கப்படும். உங்களுடைய ஐடியாக்களை சமர்ப்பிக்க கடைசி நாள் இந்தாண்டு ஜூன் 26 ஆம் தேதி ஆகும்.

இதுகுறித்துப் பேசிய துபாய் காவல்துறையின் கண்டுபிடிப்புக் கவுன்சிலின் தலைவர் லெப்டினட் கர்னல் இப்ராஹீம் பின் சபா அல் மெர்ரி,” அமீரகத்திற்குள் வசிப்பவர்கள் அல்லது வெளிநாட்டில் இருப்பவர்கள் என யாரும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். துபாய் காவல்துறையின் இணையதளத்தில் சென்று போட்டியில் பங்கேற்க பதிவு செய்துகொள்ளவேண்டும். அதன்பின்னர் அதில் கொடுக்கப்பட்டுள்ள சேலஞ்ச்களுக்கு பதிலளிக்கவேண்டும். ஒவ்வொரு சேலஞ்ச்-ற்கும் தலா 25,000 திர்ஹம்ஸ் பரிசானது வழங்கப்படும்” என்றார்.

உலகளாவிய பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்களை இதில் பங்குபெறச் செய்யும் வகையில் சந்தைப்படுத்துதல் பணி நடைபெற்றுவருவதாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.

-dubai-police_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap