ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் உடல் நலம் சரியின்றி காலமானார்.
74 வயதான ஷேக் கலீஃபா 2004 ஆம் ஆண்டு யுஏஇ அதிபராக பதவி ஏற்றார்.
அமீரக அதிபரான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்கு அமீரகம், அரபு மற்றும் இஸ்லாமிய நாடு மற்றும் உலக மக்களுக்கு ஜனாதிபதி விவகார அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
ஷேக் கலீஃபா ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் நவம்பர் 3, 2004 முதல் பணியாற்றினார். அவர் தனது தந்தை மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யானுக்குப் பிறகு இவர் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
ஷேக் கலீஃபா 1948 ஆண்டு பிறந்தார். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் 2வது அதிபராகவும், அபுதாபியின் 16-வது ஆட்சியாளராகவும் இருந்தார். இவர் உலகின் இரண்டாவது பணக்கார அரசரும் ஆவார். இவருடைய சொத்து மதிப்பு, 23 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கணக்கிடப்படுகிறது. மேலும் ஷேக் சயீதின் மூத்த மகனும் ஆவார்.
அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், ஷேக் கலீஃபா அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு பாகுபாடின்றி ஆட்சி அமைத்தார். மேலும் சமநிலையான வளர்ச்சியை அடைய பல்வேறு முக்கிய திட்டங்களை அமல்படுத்தினார்.
ஷேக் கலீஃபா ஒரு சிறந்த அதிபராகவும், தனது மக்கள் விவகாரங்களில் மிக கவனமுடன் கையாண்டார். அவரது ஆட்சியில் தான், ஐக்கிய அரபு அமீரகம் தீவிர வளர்ச்சி அடைந்தது.
பின்னர் 2014 இல் இவருக்கு ஏற்பட்ட மாரடைப்புக்கு பிறகு ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதிலிருந்து நீண்ட காலமாக அன்றாட அரசு விவகாரங்களில் ஈடுபடுவதையும் நிறுத்தி இருந்தார். தற்போது ஷேக் கலீஃபாவின் மறைவுக்கு அமீரக தலைவரகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் மறைவின் காரணமாக 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.