இந்திய மாலுமிகள் 7 பேரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்திய நிலையில், அவர்களை மீட்க முயற்சி செய்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏமன் நாட்டின் தீவில் இருந்து கடந்த 2 ஆம் தேதி அமீரகத்திற்கு சொந்தமான சரக்கு கப்பல் சவுதி அரேபியாவின் ஜசன் நகரிருக்கு புறப்பட்டது. அந்த சரக்குகப்பலில் 7 இந்தியர்கள் உள்பட 11 மாலுமிகள் (கப்பல் ஓட்டிகள்) பயணித்தனர்.
கப்பல் கடந்த 3 ஆம் தேதி இரவு ஏமனின் சலீப் துறைமுகத்தில் இருந்து கடலில் பயணித்துக்கொண்டிருந்தபோது அதில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏறினர். மேலும், கப்பலில் இருந்த 7 இந்தியர்கள் உள்பட 11 மாலுமிகளையும் பிணைக் கைதிகளாக பிடித்து கப்பலையும் கடத்திச் சென்றனர். இதையடுத்து, கடத்தப்பட்ட கப்பலையும், அதில் இருந்த மாலுமிகளையும் மீட்கும் பணியில் அமீரகம், இந்தியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 7 இந்தியர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் தீர்க்கவும், 7 பேரையும் விரைவாக விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெளியுறவுத்துறை கூறியிருக்கிறது.
அபுதாபி விமான நிலையம், அபுதாபியின் முஷாபா நகரில் உள்ள அட்னாக் எண்ணெய் நிறுவனத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 17 ஆம் தேதி டிரோன் தாக்குதல் நடத்தினர். இதில், எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 2 இந்தியர்கள், 1 பாகிஸ்தான் நாட்டவர் என 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அமீரகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அபுதாபியில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.