UAE Tamil Web

உங்களது பெற்றோரை அமீரகம் அழைத்துவந்து உங்களுடன் தங்கவைத்துக்கொள்ள (ஸ்பான்சர்) விருப்பமா? விதிமுறைகள் என்ன? எவ்வளவு செலவாகும்?

elderly-parent-

அமீரகம் வந்தாச்சு. வேலை, திருமணம் என வாழ்க்கையின் முதல் பகுதி நன்றாகவே கடந்துவிட்டாலும் நம்மில் பலருக்கும் எழும் கேள்வி, நம்மை அச்சுறுத்துருக்கிற, அசைத்துப் பார்க்கிற கேள்வி, ஊரில் தனியாக இருக்கும் அம்மா, அப்பாவை யார் கவனித்துக்கொள்வது? பேசாமல் அமீரகம் அழைத்துவந்துவிடலாமா? என்ன செலவாகிவிடும்? இதைப்பற்றிய புரிதலை அளிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.

குறைந்தபட்ச சம்பளம்

நீங்கள் உங்களுடைய பெற்றோரை அமீரகம் அழைத்துவந்து ஸ்பான்சர் செய்ய வேண்டுமானால் மாதம் 20,000 அல்லது 19,000 திர்ஹம்ஸ் ஊதியம் மற்றும் இரண்டு படுக்கை அறை வசதியுள்ள வீடு ஒன்றில் நீங்கள் வசிப்பவராக இருத்தல் வேண்டும். அதேபோல, உங்களுடைய பெற்றோருடைய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மருத்துவக் காப்பீடு எடுத்திருத்தல் வேண்டும். ஒருமுறை வழங்கப்படும் விசா 1 வருடத்திற்கு செல்லுபடியாகும். அதன்பின்னர் வருடந்தோறும் நீங்கள் அதனைப் புதுப்பித்துக்கொள்ளவேண்டும்.

யார் விண்ணப்பிக்கலாம்?

பெற்றோர் விசாவை அந்தத் தம்பதியின்

  • மகன்
  • மகள்
  • மருமகன்
  • மருமகள்

-ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

ஆனால், உங்களது மாமியார் அல்லது மாமனார் ஆகியோருக்கு நீங்கள் ஸ்பான்சர் செய்ய விரும்பினால், GDRFA வின் மனிதாபிமானத் துறையிடம் (humanitarian section) இருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

இதுபற்றி கருத்துத் தெரிவித்த எமிரேட்ஸ் ஸோன் மக்கள் தொடர்புத்துறையில் தொழில் மேம்பாட்டு ஆலோசகராக இருக்கும் காஷிஃப் அலி,” உங்களுடைய மாமியார் அல்லது மாமனார் ஆகியோருக்கு நீங்கள் ஸ்பான்சர் செய்வதாக இருந்தால் உறவினர் சான்றிதழ் மற்றும் கூடுதலாக சில ஆவணங்களும் தேவைப்படும். தங்களது தாய் தந்தைக்கு ஸ்பான்சர் செய்பவர்களுக்கு அடிப்படையான ஆவணங்கள் இருந்தால் போதும். அவர்களுக்கு மேற்கண்ட விதிமுறைகள் தேவையில்லை” என்றார்.

இருவரையுமே அழைத்துவரவேண்டும்

மற்றொரு முக்கியமான அம்சம் உங்களுடைய தாய் மற்றும் தந்தை ஆகிய இருவருக்குமேதான் ஸ்பான்சர் செய்யமுடியும்.

அமீரக அரசின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, அமீரகத்தில் வசித்துவரும் வெளிநாட்டுவாழ் மக்கள் தங்களது தாய் மற்றும் தந்தை ஆகிய இருவருக்குமே ஸ்பான்சர் செய்யவேண்டும். அதேபோல, நீங்கள் மட்டுமே உங்களது பெற்றோரை பார்த்துக்கொள்ளக்கூடிய ஒரே நபர் என்பதற்கும், உங்களது தாய்நாட்டில் உங்களது பெற்றோரை உடனிருந்து பார்த்துக்கொள்ள வேறு நபர்கள் இல்லை என்பதையும் நிரூபிக்க ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

உங்களுடைய பெற்றோரில் ஒருவர் இறந்துவிட்டாலோ அல்லது விவாகரத்து பெற்றிருந்தாலோ அதற்குரிய சட்டப்பூர்வ ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

சார்பு சான்றிதழ்

என்னுடைய பெற்றோரை நான் கவனித்துக்கொள்கிறேன் என துணைத் தூதரகத்தில் நீங்கள் சார்புச் சான்றிதழ் (dependency certificate) பெறவேண்டும்.

“தாய் மற்றும் தந்தை தனித்தனியாக பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும். தூதரகத்தில் இந்த பிரமாணப் பத்திரத்தைப் பெறலாம். பத்திரமானது ஆங்கிலத்தில் இருந்தால் அதனை அரபிக்கில் மொழிபெயர்த்து சமர்ப்பிக்கவேண்டும்”என துபாயைச் சேர்ந்த ஃபர்ஸ்ட் கேட் பிசினஸ் சர்வீசஸ் நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணிபுரியும் சிராஜுதீன் உமர் தெரிவித்தார்.

மேற்கண்ட தகுதிகளை நீங்கள் பெற்றிருந்தால் உங்களுடைய பெற்றோருக்கான விசா கோரி விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்கள் (ஸ்பான்சர் செய்பவருக்கு)

  • பாஸ்போர்ட் நகல் (கலரில் இருத்தல் வேண்டும்) பாஸ்போர்ட் ஆறுமாத காலம் செல்லுபடியாகும்படி இருத்தல் வேண்டும்.
  • அசல் எமிரேட்ஸ் ஐடி
  • வீட்டு வாடகை ஒப்பந்தம் (இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டில்தான் நீங்கள் வசிக்கிறீர்கள் என்பதற்காக) நீங்கள் துபாயில் வசிப்பவராக இருந்தால் நீங்கள் இஜாரி (Ejari) சமர்ப்பிக்க வேண்டும். மற்ற எமிரேட்களில் வசிப்போர் வாடகை ஒப்பந்தத்துடன் மின்சாரக் கட்டண ரசீதையும் இணைத்து சமர்ப்பிக்கவேண்டும்.
  • பணி ஒப்பந்தம் (Labour contract), உங்களுடைய மாத சம்பளம் 20,000 திர்ஹம்ஸ் என்பதை நிரூபிக்க. அரசு, பகுதி அரசு மற்றும் ஃப்ரீ ஸோன் பணியாளர்கள் அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட சம்பள சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
  • IBAN (International Bank Account Number) எண்.
  • மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, தபால் பெட்டி எண்.
  • பிறப்புச் சான்றிதழ் (கட்டாயமில்லை, நீங்கள் யாருக்காக விண்ணப்பிக்கிறீர்களோ அவருக்கும் உங்களுக்குமான உறவு முறையைப் பொறுத்து தேவைப்படலாம்)

தேவையான ஆவணங்கள் (ஸ்பான்சர் பெறுபவருக்கு)

  • பாஸ்போர்ட் நகல் (கலரில் இருத்தல் வேண்டும்) பாஸ்போர்ட் மூன்றுமாத காலம் செல்லுபடியாகும்படி இருத்தல் வேண்டும்.
  • சத்தியப் பிரமாணம்/சார்பு சான்றிதழ்.
  • பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்.

கட்டணம்

  • ஸ்பான்சரின் தனிப்பட்ட கோப்பிற்காக – 280 திர்ஹம்ஸ் (முதல்முறை மட்டும் பொருந்தும்)
  • நுழைவு அனுமதி – நாட்டிலிருந்து வெளியே இருப்பவர்களுக்கு 530 திர்ஹம்ஸ்.
  • பாதுகாப்பு வைப்புநிதி (Security Deposit) (திரும்ப வழங்கப்படும்) – துபாய்க்கு 2,600 திர்ஹம்ஸ். ஒவ்வொரு எமிரேட்டிற்கும் இந்தக் கட்டணம் மாறுபடும்.
  • மருத்துவ உடற்தகுதி பரிசோதனை – 345 திர்ஹம்ஸ்.
  • எமிரேட்ஸ் ஐடி – 170 திர்ஹம்ஸ். (ஒரு வருடத்திற்கு மட்டும்)
  • விசா ஸ்டாம் செய்ய – 400 திர்ஹம்ஸ் (வழக்கமான கட்டணம்), 480 திர்ஹம்ஸ் (அவசர கட்டணம்)
  • உமர் கருத்துப்படி, ஒருவேளை உங்களது பெற்றோர் ஏற்கனவே அமீரகத்தில் இருந்தால், அவர்களது ஸ்டேட்டஸை மாற்ற (Change of status – Inside country’ fee) கூடுதலாக 1,330 திர்ஹம்ஸ் செலுத்தவேண்டும்.