34.3 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

துபாய் : விசாவைப் புதுப்பிக்க இனி மருத்துவ உடற் தகுதி பரிசோதனை கட்டாயம்..!

medical-main

இன்று முதல் துபாய் குடியிருப்பாளர்கள் தங்களது விசாக்களை புதுப்பிக்க, மருத்துவ உடற் தகுதி பரிசோதனைக்கு (Medical Fitness Test) தங்களை உட்படுத்திக்கொள்வது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நடைமுறை துபாயில் மட்டுமே தற்போது அமலுக்கு வந்திருக்கிறது.

சமீபத்தில் அமீரக அரசு “மக்கள் விசா புதுப்பித்தலின்போது மருத்துவ உடற் தகுதி பரிசோதனையை மேற்கொள்ள தற்காலிகமாக விலக்கு அளிப்பதாக அறிவித்திருந்தது. இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். இந்நிலையில் புதிய விண்ணப்பதாரர்கள் மருத்துவ உடற் தகுதி பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் விசா சார்ந்த பணிகளை மேற்கொண்டுவரும் அமர் மையங்கள், இன்று முதல் துபாய் குடியிருப்பாளர்கள் தங்களது விசாக்களைப் புதுப்பிக்க உடற் தகுதி பரிசோதனை அவசியம் எனத் தெரிவித்துள்ளது.

துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணிபுரியும் மூசா பின் அலி தயானி (Moosa Bin Ali Dhayani) இதுகுறித்துப் பேசுகையில், ” இன்று முதல் விசா புதுப்பித்தலுக்கு விண்ணப்பிப்போர் அனைவரும் மருத்துவ உடற் தகுதி பரிசோதனையை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

துபாய் சுகாதார ஆணையம், “இன்று முதல் விசா புதுப்பித்தலுக்கு மருத்துவ உடற் தகுதி பரிசோதனை அவசியம் எனவும் இந்த கட்டுப்பாடு துபாய் விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும்” அறிவித்திருக்கிறது.

“அபுதாபியைப் பொறுத்தவரையில் இந்த மாற்றம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. புதிய விசா வைத்திருப்போர் மட்டுமே உடற் தகுதி பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும். விசாக்களை புதுப்பிக்க விரும்புவோருக்கு இந்நடைமுறை பின்பற்றப்படுவதில்லை” என அபுதாபியைச் சேர்ந்த தொழில் ஆலோசகர் திரு. காஷிஃப் அலி தெரிவித்தார்.

ஷார்ஜாவில் வழங்கப்பட்ட விசாக்களை புதுப்பிக்கவும் மருத்துவ உடற் தகுதி பரிசோதனை அவசியமில்லை. “ஷார்ஜாவில் வழங்கப்பட்ட விசாவை புதுப்பித்தலுக்கான நடைமுறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படவில்லை என அந்த எமிரேட்டில் உள்ள தட்டச்சு நிறுவனம் ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.

மருத்துவ உடற் தகுதி பரிசோதனைக்கு ஆகும் செலவு எவ்வளவு?

“மருத்துவ உடற் தகுதி பரிசோதனைக்கான கட்டணங்களை தீர்மானிப்பது, பரிசோதனை முடிவுகளை நீங்கள் பெற விரும்பும் கால அளவைப் பொறுத்தது” என்றார் தயானி.

வழக்கமான விண்ணப்பங்களுக்கு 320 திர்ஹம்ஸ் வசூலிக்கப்படுகிறது. (இதில் பரிசோதனை முடிவுகள் ஐந்து வேலை நாட்களுக்குள்ளாக பயனாளருக்குக் கிடைக்கும்)

48 மணி நேரத்தில் முடிவுகளைப் பெற – 410 திர்ஹம்ஸும்,

24 மணி நேரத்தில் முடிவுகளைப் பெற – 510 திர்ஹம்களும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

நான்கு மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகளைப் பெற (VIP) – 750 திர்ஹம்ஸ் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பிறகு உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சலிலும், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு  SMS மூலமாகவும் அதுகுறித்த தகவல் தெரிவிக்கப்படும்.

இதையும் படிங்க.!