அமீரக வாழ் மக்களுக்கு அடுத்த தலைமுறை பாஸ்போர்ட் மற்றும் எமிரேட்ஸ் ஐடியை வழங்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது அமீரக அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA). இதன் நீட்சியாக கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட எமிரேட்ஸ் ஐடியை ICA வெளியிடத் துவங்கியுள்ளது.
இதுகுறித்துப் பேசிய ICA வின் தற்காலிக இயக்குனர் மேஜர் ஜெனரல் சுஹைல் சயீத் அல் கைலி,” மக்கள் தரவுகளை தரமான முறையில் கையாளும் விதத்தில் இந்தப் புதிய எமிரேட்ஸ் ஐடி தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சோதனைகள் மற்றும் உலகத் தர மதிப்பீட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இது அரசின் டிஜிட்டல் பாதைக்கு மிகவும் உகந்ததாகும்” என்றார்.
View this post on Instagram
பாலி கார்பனேட்டால் தயாரிக்கப்படும் இந்தப் புதிய ஐடியை 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்திட முடியும். லேசர் ரீதியில், ஐடி உரிமையாளரின் புகைப்படம் அவரது பிறந்த தேதியுடன் குறிக்கப்பட்டிருக்கும்.
இதில் பயன்படுத்தப்படும் சிப், அதிக திறன் கொண்டதனால் எளிதில் தரவு வாசிப்பு சாத்தியமாகும். ஐடியை வைத்திருப்பவரின் நாடு, வேலை, ஐடி வழங்கப்பட்ட எமிரேட் ஆகிய தகவல்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்தப் புதிய ஐடியின் தரவுகளை ICA வின் E-Link மூலமாகவும் பயன்படுத்தலாம் என்பது இதன் தனிச்சிறப்பாகும். மேம்படுத்தப்பட்ட இந்த ஐடியினால் மோசடி வேலைகள் இனி நடைபெறாது என தீர்க்கமாக நம்பலாம்.
புதிய எமிரேட்ஸ் ஐடி வேண்டி விண்ணப்பித்தோர், இணைய வழி எமிரேட்ஸ் ஐடியை உபயோகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
