அல் அய்னில் ஆச்சரியமூட்டும் பாலைவன பூங்கா திறப்பு.! அதன் சிறப்பம்சங்கள் என்ன.?

கவர்ச்சிகரமான தொல்பொருள், வரலாற்று சிறப்புகள் மற்றும் மகிழ்வூட்டும் வெளிப்புற சாகச நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு புதிய சுற்றுலா அம்சம் அல் ஐனில் திறக்கப்பட்டுள்ளது.

அபுதாபி நிர்வாக சபை உறுப்பினரும் அபுதாபி நிர்வாக அலுவலகத்தின் தலைவருமான ஷேக் காலித் பின் முஹம்மத் பின் சயீத் அல் நஹ்யான் கடந்த புதன்கிழமை ஜெபல் ஹஃபிட் மலையின் கிழக்குப் பகுதியில் அல் ஐனுக்கு 20 கி.மீ தெற்கே அமைந்துள்ள இந்த ஜெபல் ஹஃபிட் பாலைவன பூங்காவை திறந்து வைத்தார்.

desert park

அதாவது அபுதாபியின் கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறையால் இந்த புதிய பாரம்பரிய பூங்கா தொடங்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோ (UNESCO), உலக பாரம்பரிய தளமாக அமீரகத்தில் நியமிக்கப்பட்ட முதல் தளத்தின் ஒரு பகுதியாக இந்த பூங்கா உள்ளது. மேலும் ஏராளமான தனித்துவமான தொல்பொருள் கண்டுபிடிப்புகள் இந்த பூங்காவில் உள்ளன. அவற்றுள் சில 8,000 ஆண்டுகளுக்கு முந்தையவை ஆகும்.

desert park 1

இந்த புதிய ஈர்ப்பில் பைக் சவாரி, வழிகாட்டப்பட்ட ஹைகிங் சுற்றுப்பயணங்கள் (guided hiking tours), ஆடம்பர ‘கிளாம்பிங்’ (சொகுசு தங்குமிடம் மற்றும் வசதிகளை உள்ளடக்கிய முகாம்) முதல் தனி கூடார முகாம் வரை பல முகாம் விருப்பங்கள் மற்றும் இயங்கும் வண்டிகளில் வழிகாட்டும் சுற்றுப்பயணங்கள் (guided tours in powered carts) உள்ளிட்ட பல வெளிப்புற நடவடிக்கைகள் இடம்பெறும்.

இந்த பூங்கா குறித்து “இது எங்கள் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான டி.சி.டி அபுதாபி கட்டளையின் ஒரு பகுதியாகும். அதே நேரத்தில் குடியிருப்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் புதுமையான, அதிசயமான மற்றும் பொழுதுபோக்கு அனுபவங்களை ஜெபல் ஹபிட் பாலைவன பூங்கா வழங்குகின்றது” என்று டி.சி.டி அபுதாபியின் தலைவர் முகமது கலீஃபா அல் முபாரக் கூறினார்.

மேலும் “இந்த பூங்கா இப்பகுதியின் தொல்பொருள் மற்றும் வரலாற்றில் ஆர்வமுள்ள எவருக்கும், சாகச வெளிப்புற நடவடிக்கைகளை அனுபவிப்பவர்களுக்கும் மிகப்பெரிய ஈர்ப்பாக இருக்கும். எனவே, அபுதாபி சமூகத்தினரிடமிருந்தும், பார்வையாளர்களிடமிருந்தும் இந்த நம்பமுடியாத புதிய ஈர்ப்பை வரவேற்க ஆதரவுகளை நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்றும் அவர் கூறினார்.

பழமையின் ஆதாரம்:

இந்த பூங்காவின் தொல்பொருள் தளங்கள் கடந்த 8,000 ஆண்டுகளில் நாடு முழுவதும் நிகழ்ந்த பல முக்கிய மாற்றங்களை பிரதிபலிக்கின்றன. இந்த பகுதியானது கற்காலத்திலிருந்து இரும்புக் காலம் வரையிலான தொடர்ச்சியான வரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரங்களின் வளர்ச்சியைக் கண்டதாக சான்றுகள் கூறுகின்றன. அதன் மக்கள் நாடோடி சமூகங்களிலிருந்து இன்று நாம் காணும் சோலையின் இடைவிடாத ஆக்கிரமிப்புக்கு மாறுவதைக் ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். அதுமட்டுமின்றி பூங்காவின் முக்கிய ஈர்ப்புகளில் மீட்டெடுக்கப்பட்ட மற்றும் மீட்டெடுக்கப்படாத வெண்கல வயது கல்லறைகளும் உள்ளன.

Loading...