UAE Tamil Web

இந்தியா – அமீரகம் இடையேயான போக்குவரத்துத்தடை குறித்து நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்..!

Stock-India-airport-passengers

இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக இந்தியா – அமீரகம் இடையேயான விமானப் போக்குவரத்திற்கு 25 ஆம் தேதிமுதல் 10 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சிவில் விமானப் போக்குவரத்து பொது ஆணையம் மற்றும் தேசிய அவசர, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) ஆகியவை அறிவித்தன. இந்தத் தடை குறித்து நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

எந்தெந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன?

இந்தியாவில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு அமீரகம் வரும் அனைத்து தேசிய மற்றும் வெளிநாட்டு விமானங்கள் மற்றும் டிரான்ஸிட் பயணிகளை ஏற்றி வரும் விமானங்களுக்கும் அமீரகத்திற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமீரகம் வழியாக இந்தியா செல்பவர்கள் (டிரான்ஸிட்) தங்களது பயணங்களை மேற்கொள்ளலாம்.

எத்தனை நாட்களுக்குத் தடை?

இந்தியா – அமீரகம் இடையேயான விமானப் போக்குவரத்திற்கு 24 ஆம் தேதி இரவு 11.59 மணிமுதல் அடுத்த10 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேலும் நீட்டிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரான்ஸிட் பயணிகளுக்கும் தடை பொருந்துமா?

ஏப்ரல் 24 சனிக்கிழமை இரவு 11.59 துவங்கி பிற நாடுகள் மூலமாக அமீரகம் வருபவர்கள், நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதான 14 நாட்கள் இந்தியாவில் அவர் தங்கியிருந்திருக்கக் கூடாது. (உதாரணமாக சென்னையில் இருந்து அமெரிக்கா வழியாக துபாய் வருகிறீர் என்றால், அமெரிக்காவில் நீங்கள் 14 நாட்கள் தங்கியிருந்தால் மட்டுமே அமீரகத்திற்குள் நுழைய உங்களுக்கு அனுமதி கிடைக்கும்)

யாருக்கெல்லாம் இதில் விலக்கு உண்டு?

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், சில குறிப்பிட்ட பிரிவினருக்கு இந்தத் தடையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமீரக குடிமக்கள், டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், அரசு உயர் அதிகாரிகள், வணிக விமானங்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் கோல்டன் ரெசிடன்ஸி விசா வைத்திருப்பவர்கள் இந்தியா – அமீரகம் இடையே பயணிக்கலாம்.

அவர்களுக்கான விதிமுறைகள் என்ன?

இந்தியா – அமீரகம் இடையே பயணிக்க அனுமதிபெற்றவர்கள் தங்களது பயண நேரத்திற்கு முன்பான 48 மணிநேரத்திற்குள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்கவேண்டும். அதில் QR Code இருத்தல் வேண்டும்.

மேலும், 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுதல், அமீரகம் வந்தவுடன் PCR பரிசோதனை எடுத்துக்கொள்தல், அமீரகத்திற்குள் நுழைந்த 4 மற்றும் 8 வது நாள் மீண்டும் PCR பரிசோதனை எடுத்துக்கொள்தல் ஆகிய கொரோனா விதிமுறைகளை சமரசமின்றி இவர்கள் கடைபிடிக்கவேண்டும்.

அமீரகத்திலிருந்து இந்தியா செல்லலாமா?

பயணிகள் அமீரகத்திலிருந்து இந்தியா செல்ல வழக்கம்போல விமானங்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரக்கு விமானங்கள் இயங்குமா?

இரு நாடுகளுக்கும் இடையே சரக்கு விமான சேவைகள் தொடர்ந்து இயங்கும் எனவும் அமீரக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.