36.9 C
Dubai
May 25, 2020
UAE Tamil Web

அமீரகத்தில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்கள் நாடு திரும்ப சிறப்பு விமானங்களை இயக்க இந்திய அரசு ஒப்புதல்!

worker

துபாய் : அமீரகத்தில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்துவரும் இந்தியாவைச் சேர்ந்த கடல்சார் தொழிலாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களை, அந்நிறுவனங்கள் சிறப்பு விமானங்களின் மூலம் தாயகம் அனுப்பும் முயற்சிக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தலைமைத் தூதர் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் சிறப்பு விமானங்களின் மூலமாக அமீரகத்தில் பணிபுரிந்து வரும் கடல் தொழிலாளர்கள் உட்பட அனைத்து விதமான தொழிலாளர்களும் தாயகம் திரும்ப  அவர்களது நிறுவனங்கள் நடவடவடிக்கை மேற்கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களைத் தாயகம் அழைத்துவர இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் இரண்டாம் பகுதி இன்றோடு (மே 23) முடிவடைய இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

துபாயிலிருக்கும் இந்தியத் துணைத் தூதரக தலைமை அதிகாரி விபுல் இதுகுறித்துப் பேசுகையில்,” இந்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையானது, தொழிலாளர்களை சிறப்பு விமானம் மூலம் தாயகம் அனுப்ப விரும்பும் அமீரக நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் பல நிறுவனங்கள் இந்தியத் தொழிலாளர்களை தாயகம் அனுப்ப முயற்சித்து வருகின்றனர். அந்நிறுவனங்கள் இதுகுறித்து எங்களிடம் அனுமதி வேண்டி தொடர்பு கொண்டனர்” என்றார்.

“அமீரகத்திற்கான இந்தியத் தூதரான பவன் கபூர் இந்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இந்த சிறப்பு விமான இயக்கம் குறித்த சுற்றறிக்கை இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது” என விபுல் தெரிவித்தார்.

இந்திய அரசின் இரண்டு மீட்புத் திட்டத்தின் போதும் நாடு திரும்ப 12,000 தொழிலாளர்கள் விண்ணப்பித்திருந்தாக விபுல் குறிப்பிட்டார்.

gulf workers
Image Credit: Gulf Reader

இந்திய உள்துறை அமைச்சகம் அளித்திருக்கும் சுற்றறிக்கையில் தொழிலாளர்களின் பயணச் செலவுகள் அனைத்தும் பயணியோ அல்லது அவர்களது நிறுவனமோ ஏற்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமீரக விதிகளின்படி, தொழிலாளர்கள் நாடு திரும்புவதற்கான பயணக் கட்டணத்தை அவர்களுடைய நிறுவனமோ அல்லது அவர்களுடைய ஸ்பான்சர்களோ ஏற்கவேண்டும்.

தொழிலாளர்களை இந்தியாவிற்கு அனுப்ப முடிவெடுத்திருக்கும் நிறுவனங்கள் இந்த சிறப்பு விமானக் கட்டணத்தை செலுத்த தயாராக இருக்கவேண்டும் என விபுல் தெரிவித்தார்.

குவாரண்டைன் செலவுகள்

இந்தியா திரும்பும் தொழிலாளர்களின் குவாரண்டைன் செலவுகளை அவர்களுடைய நிறுவனங்கள் ஏற்பது  குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,” இந்தியா திரும்பிய நாளில் இருந்து குறைந்தது 14 நாட்கள் வரை தங்களுடைய சொந்த செலவிலோ அல்லது நிறுவனங்களின் செலவிலோ தனிமைப்படுத்தலுக்கான நிறுவனங்களில் தங்கியிருக்க வேண்டும் என்ற உறுதியை பயணத்திற்கு முன்பே மக்கள் அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்திய அரசின் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் அடிப்படையில் இயக்கப்பட்ட விமானங்களில் தகுந்த காரணங்களைக் கொண்டிருந்த இந்தியர்கள் நாடு திரும்பினார்கள். சில குறிப்பிட்ட நிறுவனங்களில் உள்ள பணியாளர்களை அதிகளவில் இத்திட்டத்தின் மூலம் இந்தியா அழைத்துச் செல்வது சிரமமான ஒன்று” என விபுல் தெரிவித்தார்.

மே 7 முதல் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரெஸ் சிறப்பு விமானங்களின் மூலமாக 4000 பேர் இந்தியா திரும்பியுள்ளனர்.

இந்த சிறப்பு விமானப் போக்குவரத்தின் தேவையை அதிகரிக்கும் வகையில்10 சிறப்பு விமானங்களை இயக்குமாறு கேரளா முஸ்லிம் கல்ச்சுரல் சென்டர் (Kerala Muslim Cultural Centre) கேரள அரசிடம் கோரிக்கை வைத்திருந்ததாக விபுல் குறிப்பிட்டார்.

நாடு திரும்ப விண்ணப்பித்திருந்த இந்தியர்களின் பட்டியலில் பெரும்பான்மையாக உள்ள கேரள மக்களை விரைவில் தாயகத்திற்கு அழைத்துவர இந்த அமைப்பு முயற்சி செய்துவருகிறது.

வந்தே பாரத் மிஷன் மூலம் அதிக அளவிலான சிறப்பு விமானங்கள் கேரளாவிற்கு இயக்கப்பட்டன. இதற்குக் காரணம், விண்ணப்பித்திருந்தவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் தாயகம் திரும்ப வேண்டி அம்மாநில அரசுக்கு மக்கள் விண்ணப்பித்திருந்ததன் அடிப்படையில் அம்மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளே ஆகும்.

 

மற்ற சில பதிவுகள்