UAE Tamil Web

கொரோனாவால் திணறும் இந்தியாவிற்கு எங்களுடைய லாபத்திலிருந்து 10% அளிக்கிறோம் – அமீரக நிறுவனத்தின் தயாள குணம்..!

corona Patient

டான்யூப் குழுமத்தின் டான்யூப் ஹோம் சேல்ஸ் எனப்படும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனத்தின் மே மாத லாபத்தில் 10 சதவீதத்தை இந்தியாவிற்கு அளிக்க இருப்பதாக அந்தக் குழுமம் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக தவித்துவரும் இந்தியாவிற்கு இந்தத் தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனையின் மூலம் மாதம் மில்லியன் கணக்கில் விற்பனை நடைபெறுவதால் நிச்சயம் இந்தத் திட்டத்தின் மூலமாக இந்தியாவிற்கு உதவ முடியும் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் தலைவரான ரிஸ்வான் சாஜனின் சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அரசுசாரா அமைப்புகள் மூலமாக ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நீக்க ஏற்கனவே முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் மகாராஷ்டிரா, ரோட்டரி மற்றும் கல்செகர் மருத்துவமனை ஆகிய அமைப்புகள் மூலமாக நிதியுதவி செய்துவருகிறது இந்த நிறுவனம். மேலும் இந்தியா முழுவதும் கொரோனா பணிகளில் ஈடுபட்டுள்ள அரசுசாரா அமைப்புகளுக்கு நிதியுதவி அளிக்கவும் தயாராக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய டான்யூப் குழுமத்தின் தலைவர் அடேல் சாஜன்,” இந்தியா இதுபோன்ற சிக்கலை சந்தித்துவரும் வேளையில் இந்தியர்களுக்கு உதவுவது எங்களுடைய கடமையாகும். இந்தக் கடினமான சூழ்நிலையில் அனைத்து நிறுவனங்களும் மக்களின் உயிர்காக்க முன்வரவேண்டும் என அழைக்கிறேன். விரைவில் சுகாதார சேவைகள், ஆக்சிஜன் மற்றும் பிற அத்தியாவசியத் தேவைகள் நிறைவற்றப்பட வேண்டும்” என அவர் கூறினார்.