UAE Tamil Web

இந்தியா – அமீரகம் இடையே மீண்டும் எப்போது விமான சேவை துவங்கப்படும்..? – இந்தியத் தூதர் வெளியிட்ட அறிவிப்பு..!

travelers airport

இந்தியா – அமீரகம் இடையேயான விமானப் போக்குவரத்து கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணிமுதல் அமலுக்கு வருவதாக அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. முதலில் 10 நாட்களுக்கு விதிக்கப்பட்ட தடை பின்னர் மே 14 ஆம் தேதிவரையில் நீட்டிக்கப்பட்டு, அதன்பின்னர் மறுஅறிவிப்பு வரும்வரையில் இந்தத் தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அமீரகம் வரமுடியாமல் பலர் இந்தியாவில் தவித்துவருகின்றனர். இதுகுறித்துப் பேசிய அமீரகத்திற்கான இந்தியத் தூதர் திரு. பவன் குமார்,” மக்களின் உயிரைக் காப்பாற்றும் நோக்கில் அரசு எடுத்துள்ள இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். விடுமுறை, மருத்துவம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்தியா சென்றவர்கள் மீண்டும் அமீரகம் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சூழல் சரியாகும்வரையில் அனைவரும் பொறுமையுடன் காத்திருங்கள்” என்றார்.

அமீரக அரசு மற்றும் சுகாதாரத்துறை மக்களின் நல்வாழ்வினை முக்கிய நோக்கமாகக்கொண்டு இந்த முடிவினை எடுத்துள்ளது. மக்களின் பாதுகாப்பிற்கு அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது என அவர் குறிப்பிட்டார்.

இந்தியா – அமீரகம் இடையே எப்போது மீண்டும் விமானப்போக்குவரத்து துவங்கப்படும் என கேட்டதற்கு பதிலளித்த தூதர்,” இது தொடர்பாக அமீரக அரசிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறோம். நிலைமை சீராகும் பட்சத்தில் விரைவில் விமானப் போக்குவரத்து மீண்டும் துவங்கப்படும்” என்றார்.

மேலும்,”சரக்குப் போக்குவரத்து தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அதேபோல, அமீரகத்திலிருந்து இந்தியா செல்லும் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டுவருகிறது. அமீரகம் வரமுடியாமல் இந்தியாவில் தவிப்பவர்களுக்கு நான் சொல்வது ஒன்றைத்தான். பொறுமையோடு காத்திருங்கள் என்பதுதான் அது” என்றார்.