UAE Tamil Web

157 வேண்டிலேட்டர்கள் உட்பட பல மருத்துவ உதவிப் பொருட்களை இந்தியாவிற்கு அனுப்பிவைத்த அமீரகம் – நன்றி தெரிவித்த இந்திய அரசு..!

SUPPLIES

இந்தியா கொரோனாவின் இரண்டாம் அலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவரும் இந்த வேளையில் 157 வேண்டிலேட்டர்கள், 480 BiPAP (Bilevel positive airway pressure) கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை இந்தியாவிற்கு வழங்கியிருக்கிறது அமீரகம்.

இதனையடுத்து இந்தியாவின் சூழலை கணக்கில்கொண்டு தக்க நேரத்தில் மருத்துவ உதவிப் பொருட்களை அனுப்பியதற்கு நன்றி தெரிவிப்பதாக இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி தெரிவித்துள்ளார்.

அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில்,”கொரோனாவிற்கு எதிரான போரில் இந்தியாவும் அமீரகமும் மிகச்சிறந்த ஒத்துழைப்பைத் தொடர்கின்றன. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அமீரகத்திடமிருந்து மருத்துவ உதவிப் பொருட்களைப் பெற கடமைப்பட்டுள்ளோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தியா எடுத்துவரும் கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அமீரகம் நிச்சயம் ஒத்துழைப்பு அளிக்கும் என அமீரக வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இதுவரையில் 18 கிரையோஜெனிக் ஆக்சிஜன் டேங்கர்களையும் அமீரகம் இந்தியாவிற்கு வழங்கியிருக்கிறது.

மேலும், அபுதாபியில் உள்ள BAPS இந்து கோவில் நிர்வாகம் ஆக்ஸிஜன் டேங்கர்கள் மற்றும் சிலிண்டர்களின் விநியோகச் சங்கிலியை உருவாக்கி வருகிறது, மேலும் இந்த வாரம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் 440 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜனை இந்தியாவுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வாரம் இந்தியாவுக்கு அனுப்பப்படும் முதல் சுற்று நிவாரணப் பொருட்களில் 44 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன், 600 சிலிண்டர்களில் 30,000 லிட்டர் மருத்துவ ஆக்ஸிஜன் வாயு மற்றும் 130 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் உள்ளன என்று BAPS இந்து கோவில் நிர்வாகத்தின் தலைவர் பூஜ்ய சுவாமி பிரம்மவிஹரிதாஸ் தெரிவித்திருக்கிறார்.

SUPPLIES
0 Shares
Share via
Copy link