UAE Tamil Web

500 ஆக்சிஜன் சிலிண்டர்களை இந்தியாவிற்கு அனுப்பிய அமீரக தொழிலதிபர்..!

OXYGEN

கொரோனா இரண்டாம் அலையால் மொத்த இந்தியாவும் பாதிப்பை சந்தித்துவருகிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்தவண்ணம் உள்ளது.

இந்நிலையில் அமீரகத்தின் பிரபல இரும்புத் தொழிற்சாலையான கொனாரஸ் (Conares) -ன் தலைமை நிர்வாக அதிகாரி பாரத் பாட்டியா கொரோனாவால் திணறிவரும் இந்தியாவிற்கு 500 ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கியுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய அவர்,”500 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்தியாவிற்கு சென்றுகொண்டிருக்கின்றன. இந்த ஒவ்வொரு சிலிண்டரும் 50 லிட்டர் ஆக்சிஜனைக் கொண்டதாகும். அதுமட்டுமல்லாமல் 500 ஹோம்கேர் ஆக்சிஜன் செறிவூட்டியையும் (homecare oxygen concentrators) ஆர்டர் செய்துள்ளோம். ஒரு செறிவூட்டியின் மூலமாக 5 லிட்டர் ஆக்சிஜனை உருவாக்கலாம். இவை இன்னும் ஒருமாதத்தில் இந்தியா சென்றடையும்” என்றார்.

இந்தியாவிற்கு மருத்துவ உதவிப் பொருட்கள், மற்றும் ஆக்சிஜன் டேங்கர்களை அளிக்க முன்வந்த அமீரக அரசிற்கு தான் நன்றி தெரிவிப்பதாக பாட்டியா நெகிழ்ச்சியுடன் கூறினார்.

“இம்மாதிரியான சோதனை காலங்களில் அமீரகம் எப்போதும் இந்தியாவுடன் நிற்கிறது. இரு நாடுகளுக்கிடையிலான சகோதரத்துவ பிணைப்பு எப்போதுமே ஏறுபாதையில் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு உதவி செய்து இந்தியாவுடனான தனது நட்பின் விழுமியத்தை அமீரகம் மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது. கொரோனாவில் இருந்து இந்தியா விரைவில் மீண்டெழும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என பாட்டியா தெரிவித்தார்.

OXYGEN
0 Shares
Share via
Copy link