அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் நஹ்யான் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். 2004-ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரக தலைவராக ஷேக் கலீஃபா பின் சயீத் இருந்து வந்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷேக் கலீஃபா பின் சையத் மறைவையடுத்து, அந்நாட்டில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சகங்கள், அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்தும் மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரக அதிபர் சேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யான் மறைவுக்கு இந்தியாவில் இன்று துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இன்று அனுப்பிய தகவல்களின்படி, மறைந்த ஐக்கிய அரபு அமீரக அதிபர் சேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யானுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்று நாடு முழுவதும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அரசு முடிவு செய்துள்ளது என்றும் இதன்படி இந்தியாவில் நாளை தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும், அரசு விழாக்கள் நடைபெறாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.