UAE Tamil Web

இந்தியாவிலிருந்து துபாய் வருபவர்களின் தடுப்பூசி குறித்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அரசு..!

AIRPORT

இந்தியாவில் இருந்து துபாய் வரும் துபாயில் வழங்கப்பட்ட ரெசிடென்சி விசாவை வைத்திருப்பவர்கள் குடியிருப்பு மற்றும் வெளியுறவுத்துறை இயக்குனரகத்தின் (GDRFA) ஒப்புதல் மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருந்தால் போதுமானது என தற்போது விளக்கப்பட்டுள்ளது.

விமான நிறுவனத்தின் பிரதிநிதிகள் பயணியின் GDRFA ஒப்புதல் மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் ஆகிய இரண்டை மட்டுமே சரி பார்ப்பதாகவும் பயணியின் கொரோனா தடுப்பூசி குறித்து விசாரிப்பதில்லை என பிரபல அமீரக நாளேடான கலீஜ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

துபாயை மையமாகக்கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் தனது பயணி ஒருவரின் கேள்விக்கு ட்விட்டரில் பதிலளிக்கையில், GDRFA விடம் ஒப்புதல் பெற்ற பிரிண்ட் அவுட், 48 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ், பயண நேரத்திற்கு 4 மணிநேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட கொரோனா ரேபிட் நெகட்டிவ் சான்றிதழ் ஆகியவற்றை வைத்திருத்தல் வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய ஏர் இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர்,” துபாய் சிவில் விமானப்போக்குவரத்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள விதிமுறைகளின்படி துபாய் வரும் பயணி 3 ஆவணங்களை வைத்திருத்தல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை, GDRFA ஒப்புதல், பயணத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட நெகட்டிவ் PCR சான்றிதழ், பயணத்திற்கு 4 மணி நேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட ரேபிட் PCR டெஸ்ட் சான்றிதழ் ஆகியவையாகும்.

இந்தியாவைச் சேர்ந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் டிராவல் ஏஜென்சிக்கள் மற்றும் தனது பங்குதாரர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையிலும் மேற்கண்ட கருத்தே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,” துபாய் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் எங்களுக்கு அளித்த விதிமுறைகளில் பயணி GDRFA அனுமதி பெற்றிருக்கிறாரா? என்பதை விமான நிறுவன அதிகாரிகள் பரிசோதிக்க வேண்டும். அவரின் தடுப்பூசி குறித்த தகவலை அல்ல” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அபுதாபி, ஷார்ஜா, ராஷ் அல் கைமா வரும் பயணிகளுக்கும் இதே நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து தெளிவான தகவல்கள் இன்னும் வழங்கப்படவில்லை.

முன்னதாக, இந்தியாவிலிருந்து அமீரகம் திரும்பும் அனைவரும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளில் தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதே வேளையில் சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், எக்ஸ்போ 2020 பணியாளர்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி எடுத்திருக்கவில்லை என்றாலும் அமீரகத்திற்கு வர அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

AIRPORT
22 Shares
Share via
Copy link