இந்தியாவுக்கும் அமீரகத்திற்கும் இடையேயான வா்த்தகத் உறவை மேம்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையே வா்த்தக ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை இன்று கையொப்பமாக உள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அமீரகத்தின் ஷேக் முகமது பின் ஜயீத் அல் நஹ்யானும் வெள்ளிக்கிழமை வீடியோ வாயிலாகப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளனா். இந்த சந்திப்பில் விரிவான பொருளாதார ஒப்பந்தம் கையொப்பமாக உள்ளதாக அமீரகத்தின் இந்தியத் தூதா் சஞ்சய் சுதீா் நேற்று தெரிவித்தாா்.
இது தொடா்பாக சஞ்சய் சுதீா் கூறுகையில், ‘‘இரு நாடுகளிக்கிடையே ஏற்படும் ஒப்பந்தமானது வா்த்தகத் தொடா்பை வலுப்படுத்தும். தற்போது இரு நாடுகளுக்கும் இடையே ரூ.42,000 கோடி அளவுக்கு வா்த்தகம் நடைபெறுகிறது. வருகிற 5 ஆண்டுகளில் ரூ.70,000 கோடியாக அதிகரிக்கும். இந்தியாவுக்கும் அமீரகத்ததிற்குமான நல்லுறவை அதிகரிக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்” என்றாா்.
இருநாட்டுத் தலைவா்களின் வீடியோ சந்திப்பின் மூலம் முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாக உள்ளதாக அமீரகத்தின் அதிகாரபூா்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் சா்வதேச விவகாரங்கள் குறித்தும் இருவரும் விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தில் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியா்கள் பணிபுரிந்து வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.