அரசுமுறைப் பயணமாக அமீரகம் வந்துள்ள இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் விரைவில் இந்தியாவில் திட்டமிடப்பட்ட விமான சேவைகள் மீண்டும் துவங்கப்படும் எனத் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் வகை A வில் உள்ள 97 நாடுகளுடன் பயண ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. இந்த நாடுகளுக்கு இந்தியர்கள் பயணித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர் விரைவில் இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட தடைகள் விலக்கப்படும் எனத் தெரிவித்தார்.
எக்ஸ்போ வளாகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த தகவலை ஜெய்ஷங்கர் தெரவித்தார். உடனிருந்த அமீரகத்திற்கான இந்திய தூதர் பவன் கபூர் பேசுகையில்,” இந்தியாவின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை உலக சுகாதார ஆணையம் (WHO) அங்கீகரித்துள்ளது. அமீரக அரசு ஏற்கனவே WHO அங்கீகரித்த தடுப்பூசியினை செலுத்திக்கொண்டவர்கள் நாடு திரும்பலாம் என அறிவித்திருந்தது” என்பதை நினைவுகூர்ந்தார்.
மேலும், இந்தியாவிலிருந்து அமீரகம் வருபவர்களுக்கு ரேபிட் PCR டெஸ்ட்டிலிருந்து விலக்களிக்குமாறு அமீரக அரசுக்கு கோரிக்கை வைக்க இருப்பதாகவும் ஜெய்ஷங்கர் குறிப்பிட்டார்.
முன்னதாக எக்ஸ்போவின் இந்தியா, பிரேசில், அமீரக பெவிலியன்களை இந்திய அமைச்சர் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.
