UAE Tamil Web

இந்தியா – அமீரகம் இடையேயான விமானப் போக்குவரத்துத் தடையை அடுத்தமாதம் இறுதி வரையில் நீட்டித்தது எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்..!

Stock-Abu-Dhabi-airport-passengers_

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால் இந்தியா – அமீரகம் இடையேயான பயணிகள் விமானப் போக்குவரத்தை ஏப்ரல் 25 ஆம் தேதிமுதல் 10 நாட்களுக்கு ரத்து செய்வதாக அமீரக அரசு முன்னர் அறிவித்திருந்தது.

அதன்பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் மறு அறிவிப்பு வரும் வரையில் இந்தத் தடை அமலில் இருக்கும் என அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருந்தது.

பின்னர் துபாயை மையமாகக்கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இந்தியா – அமீரகம் இடையேயான போக்குவரத்துதடையை ஜூன் 14 ஆம் தேதிவரை நீட்டிப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது இந்தத் தடையை ஜூன் 30 ஆம் தேதிவரையில் நீட்டிப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அமீரகத்தில் இருந்து இந்தியா செல்பவர்கள் தங்களது பயணத்தினை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கடந்த 14 நாட்களில் இந்தியா வழியாக பயணித்த யாரும் அமீரகத்தின் எந்தவொரு பகுதி வழியாகவும் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், சில குறிப்பிட்ட பிரிவினருக்கு இந்தத் தடையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமீரக குடிமக்கள், டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், அரசு உயர் அதிகாரிகள், வணிக விமானங்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் கோல்டன் ரெசிடன்ஸி விசா வைத்திருப்பவர்கள் இந்தியா – அமீரகம் இடையே பயணிக்கலாம்.

இந்தியா – அமீரகம் இடையே பயணிக்க அனுமதிபெற்றவர்கள் தங்களது பயண நேரத்திற்கு முன்பான 48 மணிநேரத்திற்குள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்கவேண்டும். அதில் QR Code இருத்தல் வேண்டும்.

மேலும், 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுதல், அமீரகம் வந்தவுடன் PCR பரிசோதனை எடுத்துக்கொள்தல், அமீரகத்திற்குள் நுழைந்த 4 மற்றும் 8 வது நாள் மீண்டும் PCR பரிசோதனை எடுத்துக்கொள்தல் ஆகிய கொரோனா விதிமுறைகளை சமரசமின்றி இவர்கள் கடைபிடிக்கவேண்டும்.