UAE Tamil Web

இந்தியா – அமீரகம் இடையே விமான டிக்கெட் முன்பதிவு மீண்டும் துவக்கம் – முடிவிற்கு வருகிறதா விமானப் போக்குவரத்துத் தடை?

Airport

இந்தியாவில் கொரோனா தாக்கம் மிக அதிகமாக இருப்பதால் இந்தியா – அமீரகம் இடையேயான விமானப் போக்குவரத்தை 10 நாட்களுக்கு தற்காலிகமாக தடை செய்வதாக அமீரக அரசு அறிவித்தது. கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் இந்த தடைக்காலம் துவங்கியது. இதன்காரணமாக கடைசி நேரத்தில் பல இந்தியர்கள் எப்படியாவது அமீரகம் வந்துவிட முயற்சித்தனர்.

இதனால் இந்தியா – அமீரகம் இடையேயான விமான டிக்கெட் கிடுகிடுவென உயர்ந்தது. அதிகபட்சமாக ஏப்ரல் 24 ஆம் தேதி டெல்லியில் இருந்து துபாய் வந்த விமானத்தில் ஒரு டிக்கெட் 95,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்பதிவு துவக்கம்

இந்தியா – அமீரகம் இடையேயான விமானப்போக்குவரத்து 10 நாட்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. ஆகவே மே 5 ஆம் தேதிக்கான இந்தியா – அமீரகம் இடையேயான விமான டிக்கெட் முன்பதிவு தற்போது நடைபெற்றுவருகிறது.

துபாயை மையமாகக்கொண்டு இயங்கிவரும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் மே 5 ஆம் தேதிக்கான மும்பை – துபாய் இடையேயான பிசினஸ் கிளாஸ் விமான டிக்கெட்டை 146,000 ரூபாய்க்கு (7,170 திர்ஹம்ஸ்) முன்பதிவு செய்து வருகிறது. அன்றைய தினத்திற்கான எகானமிக் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. மே 6 ஆம் தேதிக்கு இதே ரூட்டில் பயணிக்க 35,200 ரூபாய் (1,730 திர்ஹம்ஸ்) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதற்கடுத்தநாள் 57,907 (2,846திர்ஹம்ஸ்) ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில எக்கனாமிக் வாய்ப்புகளும் இருக்கின்றன. இந்தியாவின் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மே 5 ஆம் தேதி இந்தியாவில் இருந்து அமீரகம் செல்ல 590 திர்ஹம்ஸ் கட்டணமாக நிர்ணயித்துள்ளது. சில பட்ஜெட் விமானங்கள் 369 திர்ஹம்ஸ் முதல் டிக்கெட்களை வழங்கிவருகின்றன.

ஐரோப்பா முதல் பிறநாடுகள் வழியாக மக்கள் இந்தியாவிலிருந்து அமீரகம் செல்ல விரும்புவதால் இந்த டிக்கெட் விலையேற்றத்தை எமிரேட்ஸ் சந்தித்துள்ளதாகத் தெரிகிறது.

இந்தியாவில் சிக்கியுள்ள பல அமீரக வாழ் இந்தியர்கள் மீண்டும் அமீரகம் வரத் துடிக்கின்றனர். ஆகவே இனிவரும் காலங்களில் (தடை நீங்கிய பிறகு) இந்தியா – அமீரகம் இடையேயான டிக்கெட் விலை கணிசமான ஏற்றத்தைச் சந்திக்கும் என பல்வேறு டிராவல் ஏஜெண்ட்ஸ் தெரிவித்துவருகின்றனர்.

இந்தியா – அமீரகம் இடையேயான விமானப் போக்குவரத்துத் தடையை தளர்த்தவோ, நீக்குவது குறித்தோ இதுவரை எவ்வித அறிவிப்பையும் அமீரகம் அரசு வெளியிடவில்லை. தற்போது 10 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் தடைக்காலம் முடிவடையும் மே 4 ஆம் தேதிக்குப் பிறகான தேதிகளுக்கு மக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.