UAE Tamil Web

“இந்தியாவிலிருந்து துபாய் வர டிக்கெட் எடுத்துட்டேன் ; ஆனால் இப்போ என்ன பண்றதுன்னே தெரியல” – குழப்பத்தில் தவிக்கும் பயணிகள்..!

Stock-India-airport-passengers

இந்தியா – அமீரகம் இடையே விதிக்கப்பட்ட காலவரையற்ற பயணத்தடை மறு அறிவிப்பு வரும்வரையில் தொடரும் என்ற அமீரக பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தின் ஆணை நடைமுறையில் இருந்துவருகிறது. இவ்வேளையில் ஜூலை 15 துவங்கி இந்தியாவின் சில பகுதிகளில் இருந்து துபாய்க்கு விமானங்களை இயக்குவதாக சில நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதற்கான விமான டிக்கெட் முன்பதிவும் அசுர வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பல்வேறு காரணங்களினால் அமீரகத்திலிருந்து இந்தியா சென்ற அமீரக குடியிருப்பாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் சிலர் இந்தியா – துபாய் இடையே விமான டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளனர். மீண்டும் அமீரகம் வருவோம் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

துபாயில் சேல்ஸ் எக்ஸிகியூடிவ் -ஆக பணிபுரியும் ஷதாப் அலி, தனது ஆண்டு விடுமுறைக்காக சொந்த ஊருக்குச் சென்றிருந்த வேளையில் இருநாட்டுக்கு இடையே விதிக்கப்பட்ட தடை காரணமாக இந்தியாவிலேயே சிக்கிக்கொண்டார். இப்போது ஜூலை 17 ஆம் தேதி மங்களூர் – துபாய் இடையேயான ஸ்பைஸ்ஜெட் விமானப் பயணத்திற்கான டிக்கெட்டை அவர் புக் செய்திருக்கிறார்.

இதுகுறித்துப் பேசிய அவர்,”மீண்டும் விமானங்கள் இயக்கப்படுவது குறித்து தகவல் கிடைத்தவுடன் சில பயண இணையதளங்களில் அத்தகவல் சரிதானா எனப் பார்த்தேன். இரண்டு முறை முயற்சி செய்தபிறகு ஸ்பைஸ்ஜெட்-ல் எனக்கு டிக்கெட் கிடைத்தது. துபாய் திரும்புவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

இதேபோல, மற்றொரு பயணியான பைசல் ஆலம் ஃபகார்தே பேசுகையில்,” ஒருவழியாக எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருக்கிறேன். இம்முறை நாங்கள் அமீரகம் வந்தடைவோம் என நம்புகிறேன்” என்றார்.

இது ஒருபுறம் இருந்தாலும் அமீரக பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்திடம் இருந்து எவ்வித அறிவிப்பும் வெளிவராதது பெரும் குழப்பத்தை உருவாக்கியிருப்பதாக டிராவல் ஏஜென்சிக்கள் தெரிவித்துள்ளன.

கர்நாடகாவைச் சேர்ந்த சித்திக் டூர்ஸ் மற்றும் டிராவல் நிறுவனத்தின் தலைவர் தாஹா சித்திக் இதுகுறித்துப் பேசுகையில்,” இந்தியா – அமீரகம் இடையே மீண்டும் விமானங்கள் இயக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளிவந்தது முதல் பலரும் எங்களது நிறுவனத்தைத் தொடர்புகொண்டு வருகின்றனர். எதிர்வரும் நாட்களில் டிக்கெட்களுக்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகும். இருப்பினும் அமீரக அரசிடம் இருந்து இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. தகவல் உறுதிபடுத்தப்பட்டால் பல விமான நிறுவனங்கள் சேவையை வழங்க முன்வரும்” என்றார்.

மேலும் சிலர், அமீரக அரசு இந்த விவகாரத்தில் அறிவிப்பு எதையும் வெளியிடாதது தங்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. பயணத்தடையை நீக்குவது குறித்து அமீரக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னர்தான் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இருப்பதாக தெரிவித்துவருகின்றனர்.

இப்படி பல்வேறு குழப்பங்களை உண்டாக்கியிருக்கும் இந்தியா – அமீரகம் இடையேயான போக்குவரத்து குறித்து அமீரக அரசு எப்போது அறிவிக்கும் என்பதுதான் பில்லியன் டாலர் கேள்வியாக நம்முன் எஞ்சுகிறது.

Stock-India-airport-passengers
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap