UAE Tamil Web

“360 சீட்டும் காலி; எங்கேவேண்டுமானாலும் உட்காருங்கள்” – இந்தியாவிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலமாக துபாய் வந்த இரண்டு குடும்பங்கள்..!

younus

கொரோனா காரணமாக இந்தியாவில் இருந்து பயணிகள் விமானங்கள் அமீரகம் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ராஜாங்க அதிகாரிகள், கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் உள்ளிட்டோருக்கு இந்தத் தடையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்படித்தான் கேரளாவின் கொச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் வந்திருக்கிறது யூனஸ் ஹசனின் குடும்பம்.

புகழ்பெற்ற அல் அர்ஷத் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக மேலாளரான யூனஸ் அமீரக அரசின் கோல்டன் விசாவை வைத்திருக்கிறார். அவரது மனைவி ஹஃப்ஸா, அவரது குழந்தைகள் நிஹ்லா யூனஸ், நுஜும் யூனஸ், முகமது ஹிலால், முகமது ஹனி ஹம்தான் ஆகியோர்க்கும் இவர் ஸ்பான்சர் செய்திருப்பதால் அவர்களுக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலமாகவே பயணமும் சாத்தியமாகியிருக்கிறது.

டிக்கெட்டிற்கு மட்டும் 1.80 லட்ச ரூபாய் செலவிட்டுள்ளதாக யூனஸ் தெரிவித்தார். இதுகுறித்துப் பேசிய நிஹ்லா,” நாங்கள் எக்கானமி வகுப்பில் பிரயாணம் செய்தோம். இருப்பினும் மொத்தமிருந்த 360 சீட்களும் காலியாகவே இருந்ததால், எங்களை எங்கே வேண்டுமானாலும் அமர அனுமதித்தார்கள். விமான பணிப்பெண்கள் எங்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்” என்றார்.

“வழக்கமாக இமிக்ரேஷன் பகுதியில் வரிசையில் நிற்கவேண்டிவரும். ஆனால் எங்களை அமரச் சொல்லிவிட்டு எங்களது பாஸ்போர்ட்களை வாங்கி விமானப் பணிப்பெண்களே இமிக்ரேஷன் பணிகளை முடித்தனர். எங்களது ஓவ்வொருவருக்கும் ஒரு பணிப்பெண் இருந்தார். கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அவர்கள் உதவிபுரிந்தார்கள்” என நிஹ்லா தெரிவித்தார்.

பயண நேரத்தில் ஏற்பட்ட காத்திருப்பு குறித்துப் பேசிய ஹஃப்ஸா,” எங்களது சொந்த ஊரான நடபுரம் -லிருந்து நெடும்பசெரி விமான நிலையத்திற்கு வழக்கமாக 7 மணிநேரம் ஆகும். ஆனால் கேரளாவில் ஊரடங்கு அமலில் இருப்பதால், இந்தமுறை 12 மணிநேரமானது” என்றார்.

ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணிக்கு கிளம்பிய 360 இருக்கைகளைக்கொண்ட இந்த விமானத்தில் இரண்டு குடும்பங்கள் மட்டும் துபாய் வந்தடைந்திருக்கின்றன.