UAE Tamil Web

வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது.. – அமீரகம் திரும்ப முடியாமல் சொந்த ஊரில் தவிக்கும் தமிழர்கள்..!

Stock-India-airport-passengers

கொரோனாவின் கோர ஆட்டம் இப்போதுதான் ஓரளவு ஓய்ந்திருக்கிறது இந்தியாவில். லட்சக்கணக்கான பாதிப்புகள், கணக்கிலடங்கா உயிரிழப்புகள் என கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவை அலைக்கழித்த நேரம், இந்தியாவிலிருந்து பயணிகள் விமானங்கள் அமீரகம் வரத் தடை விதிப்பதாக அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

ஏப்ரல் 24 ஆம் தேதி இரவு 11.59 மணியில் இருந்து இந்தியா – அமீரகம் இடையே விமானப்போக்குவரத்திற்கு தடை அமலுக்கு வந்தது. ஆண்டு விடுமுறை, அவசர தேவைகள் உள்ளிட்ட காரணங்களுக்காக சொந்த ஊர் திரும்பிய பல தமிழர்கள் இதனால் அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.

கடந்தாண்டு கொரோனா தாக்கத்தின் போதும் இப்படி பல தமிழர்கள் விமானப் போக்குவரத்துத் தடையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்தியாவைச் சேர்ந்த விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பின்படி ஜூலை 6 ஆம் தேதிவரையில் இந்தியா – அமீரகம் இடையேயான போக்குவரத்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது..

துபாயில் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றிவரும் வினோத், கடந்த மார்ச் மாத இறுதியில் தமிழகம் திரும்பியிருக்கிறார். போக்குவரத்துத் தடையினால் வினோத்தால் தற்போது அமீரகம் வரமுடியாமல் போயிருக்கிறது.

இதுகுறித்து நமது ஆசிரியர் குழுவைத் தொடர்புகொண்ட அவர்,” விரைவில் நான் அமீரகம் திரும்பவேண்டும். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனது குடும்பத்தின் தேவை அனைத்தையும் நான் மட்டுமே கவனித்துவருகிறேன். இதே சூழ்நிலை தொடர்ந்தால் வேலை பறிபோகும் அபாயம் கூட உள்ளது. பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் இங்கே (தமிழகத்தில்) தற்காலிக பணிகளுக்குச் செல்ல முடிவெடுத்தேன். லாக்டவுன் அமலில் இருப்பதால் அதற்கும் வாய்ப்பில்லாமல் போனது” என்றார்.

மீண்டும் எப்போது இந்தியாவில் இருந்து விமானங்கள் அமீரகம் வர அனுமதியளிக்கப்படும்? என்பது தான் என்னைப்போன்ற தமிழகத்தில் சிக்கிக்கொண்ட பல அமீரகவாழ் தமிழர்களின் கேள்வியாக இருக்கிறது என அவர் தெரிவித்தார்.

தொடரும் சோகம்..

சிவகங்கையைச் சேர்ந்தவரான கனகவேல், கடந்த ஏப்ரல் மாத துவக்கத்தில், மறைந்த தனது தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள தமிழகம் சென்றிருக்கிறார். சடங்குகள் முடிவடைந்த பிறகு வேலைக்குத் திரும்பலாம் என்றால் விமானப் போக்குவரத்துடை குறித்த செய்தி, அவரைத் திடுக்கிட வைத்திருக்கிறது.

“மாரடைப்பால் இறந்த எனது அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள நான் ஏப்ரல் 7 ஆம் தேதி வீட்டிற்குத் திரும்பினேன். குறுகிய கால விடுமுறையே எனக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா காரணமாக என்னால் அமீரகம் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடனால் தவிக்கும் எங்களது குடும்பத்தை மீட்க நான் மீண்டும் அமீரகம் வந்தே ஆகவேண்டும். கொரோனா எங்களைப்போன்ற நடுத்தர வர்க்கத்தினை பெருமளவில் பாதித்துவிட்டது” என்றார்.

சென்ற ஆண்டைப்போல சிறப்பு விமான சேவைகளை இந்தியா – அமீரகம் இடையே மேற்கொள்ள இருநாடுகளும் அனுமதியளிக்கவேண்டும் அல்லது குவாரண்டைன், PCR பரிசோதனை நடைமுறைகளை மேம்படுத்துதல் போன்றவற்றின் அடிப்படையில் மீண்டும் இந்தியா – அமீரகம் இடையே விமானப் போக்குவரத்தைத் துவங்க இருநாட்டு அரசுகளும் முன்வரவேண்டும் என்பதே தமிழகத்தில் தவிக்கும் பல அமீரக வாழ் மக்களின் எதிர்பார்ப்பும்.

ஆனால் இதுவரையில் அமீரக அரசு இதுகுறித்து எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. சமீபத்தில் இதுகுறித்துப் பேசிய அமீரகத்திற்கான இந்திய தூதர் பவன் கபூர்,” கடந்த ஆண்டைப்போல ஏர் பபுள் மூலமாக இந்தியா – அமீரகம் இடையே விமான சேவையை மீண்டும் துவங்க உதவிபுரியுமாறு அமீரக அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்” என்றார்.

நற்செய்தியாக இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு, கணிசமான அளவில் குறைந்து வருகிறது. பல மாநிலங்கள் ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வை அறிவித்துள்ளன. ஆகவே தமிழகத்தில் தவிக்கும் அமீரக வாழ் மக்களின் கஷ்டங்கள் முடிவிற்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன.

Stock-India-airport-passengers
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap