UAE Tamil Web

இந்தியாவிலிருந்து அமீரகம் வருவதற்கு விமானங்கள் தயார் – டிக்கெட் விலையைக் கேட்டால்தான் தலையைச் சுற்றுகிறது..!

India - UAE

அமீரகத்தில் இருந்து மருத்துவ அவசரம் காரணமாக இந்தியா சென்றிருக்கிறார் அமீரக வாழ் இந்தியர் ஒருவர். அது கொரோனா இரண்டாம் அலை தனது ருத்ரதாண்டவத்தை துவங்கியிருந்த நேரம். அவரது மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருந்த நிலையில் டெல்லி சென்று இறங்குகிறார் அவர்.

மருத்துவமனையில் நெருக்கடி, ஆக்சிஜன் பற்றாக்குறை, மரண ஓலங்கள் என டெல்லி அபாயத்தில் இருப்பதை அவரால் எளிதில் உணர முடிந்திருக்கிறது. நல்வேளையாக அவரது மனைவி கொரோனாவில் இருந்து பிழைத்துக்கொண்டார். ஆனால் அப்போது இந்தியா – அமீரகம் இடையேயான விமானப் போக்குவரத்திற்கு அமீரக அரசு தடை விதித்தது.

உடனடியாக அமீரகம் திரும்ப வேண்டிய சூழல். நேரடியாக விமானம் கிடையாது. என்ன செய்யலாம் என யோசித்தவர் பல்வேறு டிராவல் ஏஜெண்ட்களைத் தொடர்புகொண்டு ஆலோசனை கேட்டிருக்கிறார். உஸ்பெகிஸ்தான் முதல் ஆர்மேனியா வரை எந்த நாடும் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளை ஏற்கத் தயாராக இல்லை.

“ஆர்மீனியா சென்று அங்கே 14 நாட்கள் செலவிட்டு பின்னர் அமீரகம் திரும்பலாம் என நினைத்தால் அதற்கும் வழியில்லை. ஆர்மீனியா இந்தியப் பயணிகளை மறுத்துவிட்டது. எனது நிறுவனத்தில் பணிபுரியும் சில நண்பர்கள் இவ்வாறு அமீரகம் வந்திருக்கிறார்கள்” என பாதிக்கப்பட்ட நபர் கூறுகிறார்.

வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைன் மூலமாக முயற்சிக்கலாம் என்றால் ஜூன் 15 ஆம் தேதிவரையில் பஹ்ரைனுக்கான அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்திருக்கின்றன. வேறு வழியில்லாமல் இந்தியா – அமீரகம் இடையே தனி விமானங்களை இயக்கும் நிறுவனங்களை நாடியிருக்கிறார் இவர்.

மே 18 ஆம் தேதி ஒரு விமானம் இந்தியா – துபாய் இடையே பயணிக்க இருப்பதாகவும், அடுத்த விமானம் இரண்டு வாரங்கள் கழித்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டுமா? என அதிர்ச்சியடைந்தவரை அலற வைத்திருக்கிறது விமானக் கட்டணம் குறித்த செய்தி.

8 பேர் கொண்ட தனி விமானத்தில் இந்தியாவில் இருந்து அமீரகம் வர 4,37,897 ரூபாய் (22,000 திர்ஹம்ஸ்) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பணம் இருந்தால் நீங்கள் எந்த உயரத்திற்கும் பறக்கலாம் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். விமான நிறுவனங்களின் இந்த இமாலய டிக்கெட் விலைகளை வசதி படைத்தோரால் தர முடியும். தொழிலாளர்களின் நிலை?

இப்படி அமீரகத்தில் இருந்து விடுமுறை, மருத்துவ அவசரம் போன்ற காரணங்களுக்காக இந்தியா சென்று மீண்டும் வேலைக்குத் திரும்ப முடியாமல் தவிக்கும் இந்தியர்களின் நிலை என்ன? என்பது தான் இப்போது மில்லியன் டாலர் கேள்வி…