UAE Tamil Web

எச்சரிக்கை: மலிவு விலையில் இந்தியா – UAE விமான டிக்கெட் – குறிவைக்கப்படும் தொழிலாளர்கள்..!

GoAir_

எப்படியாவது அமீரகம் வந்துவிடவேண்டும் என பல இந்தியர்களும் தாயகத்தில் தவித்துவரும் வேளையில் இதனைப் பயன்படுத்திக்கொண்டு பல மோசடி நபர்கள் தங்களது கைவைரிசையைக் காட்டிவருகின்றனர். சமீபத்தில் ஏர் இந்தியாவின் வாடிக்கையாளர் உதவி மையம் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் போலியான பக்கங்கள் மூலமாக மக்கள் ஏமாற்றப்படுவது குறித்து நம்முடைய இணையதளத்தில் பதிவிட்டிருந்தோம்.

இப்போது இந்தியாவைச் சேர்ந்த கோ ஏர் அல்லது கோ ஃபர்ஸ்ட் (Go First) விமான நிறுவனம் கொச்சி – ஷார்ஜா இடையே ஜூலை 7 ஆம் தேதி தனி விமானத்தினை இயக்க இருப்பதாகவும் இதற்கு கட்டணமாக 1650 திர்ஹம்ஸ் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு டிராவல் ஏஜென்சி விளம்பரம் செய்திருக்கிறது.

அவர்களுடைய விளம்பரத்தின்படி 1650 திர்ஹம்ஸ் செலுத்தி டிக்கெட் எடுத்தால் விமான டிக்கெட், ரேபிட் டெஸ்ட், ஒருநாள் ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொள்தல், உணவு மற்றும் விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்குச் செல்வதற்கான பயணம் ஆகியவை இலவசம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த உலகளந்த உத்தமர்கள் வெளியிட்ட விளம்பரத்தில்,” பயணிகள் சினோபார்ம், பைசர், ஸ்புட்னிக் அல்லது கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றின் இரண்டு டோஸ்களையும் எடுத்திருக்கவேண்டும். செல்லுபடியாகும் ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்கள் இந்தத் தனி விமானத்தில் செல்ல விண்ணப்பிக்கலாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பச்சைப் பொய்

“இப்படியான விளம்பரம் முழுவதும் மக்களை ஏமாற்றுவதை நோக்கமாகக்கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரிகள் பயணத்தடையை விலக்குவது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாத நிலையில் நாங்கள் இத்தகைய பயணத்திற்கு திட்டமிடவோ அல்லது இதுகுறித்து யாருடனும் ஒப்பந்தம் செய்துகொள்ளவோ இல்லை” என கோ ஏர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கோ ஏர் அல்லது கோ ஃபர்ஸ்ட் உள்ளிட்ட பெயரில் மூன்றாம் தரப்பு  அமைப்புகள் பரப்பும் அனைத்து தகவல்களும் போலியானவை. அந்தத் தகவல்களுக்கோ அல்லது அதன் அடிப்படையில் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கோ கோ ஏர் பொறுப்பேற்காது” எனவும் அந்நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாரும் ஏமாறாதீர்கள்

இந்த போலி விமானப் பயணம் குறித்து கோ ஏர் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் ஜலீல் காலித்,” இது சட்ட விரோதமானது. அந்த டிராவல் ஏஜென்சி மீது புகார் அளித்துள்ளோம். மக்கள் யாரும் இந்த செய்தியை நம்பி ஏமாறவேண்டாம். நாங்கள் இத்தகைய விமானங்களை இயக்கவில்லை. ஆகவே இதற்கு எவ்விதத்திலும் நாங்கள் பொறுப்பேற்க முடியாது” என்றார்.

GoAir_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap