இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு வரும் விமான டிக்கெட்களின் விலை உயர்வால் பயணிகள் பலரும் கவலையில் உள்ளனர். ஆகஸ்டு மாதத்தில் மும்பை, டெல்லியில் இருந்து அமீரகம் வந்த விமானங்களின் டிக்கெட்கள் 900 முதல் 1,500 திர்ஹம்ஸ் வரையில் விற்கப்பட்டன. ஆனால் இப்போது இவ்விலை உயர்ந்து டெல்லி – துபாய் இடையிலான டிக்கெட் 1,500 – 2,000 திர்ஹம்ஸ்க்கும், மும்பை – துபாய் டிக்கெட் 2,700 திர்ஹம்ஸ்க்கும் விற்கப்பட்டு வருகிறது.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் ஆகஸ்டு மாதத்தில் திருவனந்தபுரம், கொச்சி – துபாய் டிக்கெட்கள் 500 – 2,000 திர்ஹம்ஸ்க்குக் கிடைத்தன. ஆனால் இப்போது இந்த டிக்கெட்கள் 1,000 திர்ஹம்ஸ்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
அதாவது இநதியா – அமீரகம் இடையேயான டிக்கெட் விலை கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் 20 – 30 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதேபோல, துபாயில் இருந்து மும்பை மற்றும் டெல்லி செல்ல தற்போது 500 – 1,000 திர்ஹம்ஸ் செலவாகிறது. இதுவே ஆகஸ்டு மாதத் துவக்கத்தில் 200 – 300 திர்ஹம்ஸ் விலையில் டிக்கெட் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
கடந்தவாரம் துபாயில் நடைபெற்ற காணொளிக் காட்சி வழியான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல்,” இந்தியா – அமீரகம் இடையேயான ஏர் பபுள் ஒப்பந்தம் மேலும் வலுப்படுத்தப்படும். இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் இதற்கான வேலைகள் துவங்கப்படும். துபாய் எக்ஸ்போ முன்னிட்டு இந்தியாவில் இருந்து அமீரகம் வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை நன்கு உணர முடிகிறது” என்றார்.
ஜனவரி – ஜூலை மாதங்களில் இந்தியாவில் இருந்து 422,000 இந்தியர்கள் அமீரகம் வந்திருப்பதாக அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமீரகத்திற்கு வந்த மொத்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையான 2.85 மில்லியனில் இந்தியர்களின் எண்ணிக்கை 15 சதவீதமாகும்.
IPL 2021, துபாய் எக்ஸ்போ, எதிர்வரும் T20 உலகக்கோப்பை ஆகியவை காரணமாக இந்தியாவில் இருந்து அமீரகம் வரும் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துவருகிறது. ஆகவே, இந்திய அரசு அதிக அளவிலான விமானங்களை அமீரகத்திற்கு இயக்க அனுமதித்தாலொழிய விமான டிக்கெட்களின் விலை குறையாது என்கின்றனர் டிராவல் ஏஜெண்ட்கள்.
