UAE Tamil Web

இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு இயக்கப்பட்ட 2 எமிரேட்ஸ் விமானங்கள் – 73 இந்திய மருத்துவர்கள் அமீரகம் வருகை..!

doctors (4)

இந்தியாவில் சிக்கிக்கொண்ட தங்களது பணியாளர்களை அமீரகம் அழைத்துவர அஸ்தர் மருத்துவமனை மற்றும் கிளினிக்குகள் நிறுவனம் இரண்டு எமிரேட்ஸ் விமானங்களை இயக்கியுள்ளன.

இதற்காக துபாய் சுகாதார ஆணையத்திடம் முன்கூட்டியே ஒப்புதல் பெற்றிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அமீரகத்தில் உள்ள இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் பணிபுரிந்து விடுமுறைக்காக இந்தியா சென்று சிக்கிக்கொண்டவர்களை மீண்டும் அமீரகம் அழைத்து வருதலே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் என மொத்தம் 73 பேர் இந்தியாவில் இருந்து இரண்டு எமிரேட்ஸ் விமானம் மூலமாக நேற்று அமீரகம் வந்தடைந்தனர்.

“விடுமுறைக்காக இந்தியா சென்ற எங்களது பணியாளர்கள் கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட பயணத்தடையால் மீண்டும் பணிக்குத் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அவசர சிகிச்சை பிரிவு நிபுணர்கள் மற்றும் கொரோனா நோயாளிகளைக் கையாளும் அனுபவம் பெற்றவர்கள் இந்தக் குழுவில் இருக்கின்றனர்” என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர்.ஷேர்பாஸ் பிச்சு,” விமானங்களை இயக்குவதற்குத் தேவையான அனைத்து முன் அனுமதிகளையும் வெளியுறவுத்துறையிடம் பெற்றபின்னரே விமானங்கள் இயக்கப்பட்டன. கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஹைதராபாத், மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் இருந்த எங்களது பணியாளர்கள் கொச்சி மற்றும் பெங்களூரு விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து ஜூலை 7 ஆம் தேதி விமானம் மூலமாக அமீரகம் அழைத்துவரப்பட்டனர்” என்றார்.

மேலும் இதுகுறித்துப் பேசிய அவர்,” துபாய் சுகாதார ஆணையம், விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் ஆகியவற்றிற்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். ஏனெனில் இத்தகைய கொரோனா சூழலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவேண்டிய சூழ்நிலையில் தவித்தபோது சரியான நேரத்தில் எங்களுக்கு உதவிகள் கிடைத்தன” என்றார்.

doctors (4)
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap