UAE Tamil Web

இந்திய ஓவியருக்கு 10 வருடங்களுக்கான கோல்டன் விசா : இன்ப அதிர்ச்சி கொடுத்த அமீரக அரசு..!

Atul-Panase-profile

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் அதுல் பனாசே. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் குடியேறிய இவர், முழுநேர ஓவியராக இருந்துவருகிறார். சர்வதேச ஓவியக் கண்காட்சி பலவற்றில் இவருடைய படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. 55 வயதாகும் அதுல், கொரோனா காலத்தில் பல்வேறு பத்திரிகைகளில் விழிப்புணர்வு ஓவியங்களையும் வரைந்திருக்கிறார்.

சமீபத்தில் கலைப் பிரிவின் அடிப்படையில் கோல்டன் விசாவிற்காக விண்ணப்பித்திருக்கிறார் இவர். இன்ப அதிர்ச்சி தரும் விதத்தில் இவருடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. கலையில் சிறந்து விளங்கும் நபர்களை கவுரவிக்க தவறுவதில்லை என்பதை அமீரகம் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.

Beyond-the-colors-
Image Credit: Atul Panase

சிறுவயதில் இசைக் கலைஞராக வரவேண்டும் என தனக்கு ஆசை இருந்ததாகவும் பின்னர் அது நடைபெறவில்லை எனவும் அதுல் கூறுகிறார். புகைப்படங்கள் எடுப்பதிலும் வல்லவரான இவர் 2002 ஆம் ஆண்டிற்கான நிக்கான் புகைப்பட விருதை (Nikon Photography Award in 2002) வென்றவராவார்.

கோல்டன் விசா குறித்துப் பேசிய அதுல்,” கலையின் உச்சத்தை அடைய குறுக்கு வழிகளே கிடையாது. உங்களுடைய கலை முழு உருவம் பெற சில சமயம் வருடக்கணக்கில் காத்திருக்கவேண்டும். விசா இருக்கிறது, தங்குதல் குறித்த கவலை இனி தேவையில்லை என்பது என்னை மேலும் கலையில் உத்வேகத்தோடு இயங்க வைக்கும். என்னைப்பொறுத்தவரையில் கலை என்பது ஆக்சிஜன் போன்றது” என்றார்.

Painting_
Image Credit: Atul Panase

சர்வதேச ஓவியப் போட்டிகளில் அமீரக அரசின் சார்பில் கலந்துகொள்ளும் நபர்களை வழிநடத்துபவராக அதுல் இருந்திருக்கிறார். 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டில் ஆர்ட் துபாயின் மேற்பார்வையாளராக இவர் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

2020 ஆம் ஆண்டு கொரோனா சமயத்தில், அமீரகம் உள்ளிட்ட 6 நாடுகளில் வீட்டிலிருந்தே பணிபுரியும் நபர்களுக்காக ஓவிய வகுப்புகளை நடத்தினார். இதன்மூலமாக சமர்பிக்கப்பட்ட ஓவியங்கள் அப்போது பத்திரிகைகளில் வெளிவந்தன.

சுதந்திர தின விழாவையொட்டி நடைபெற இருக்கும் கண்காட்சிகளை நிர்வகிக்கும் பணிகளில் தற்போது அதுல் ஈடுபட்டு வருகிறார்.

Atul-Panase-profile
2 Shares
Share via
Copy link