21.9 C
Dubai
October 31, 2020
UAE Tamil Web

துபாய் ஆட்சியாளரின் பிறந்தநாள் பரிசாக இந்திய இளைஞர் வரைந்த பாதாம் ஓவியம்..!

Almond

அமீரகத்தின் துணைத்தலைவர் மற்றும் பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் 71 ஆவது பிறந்தநாள் பரிசாக இந்திய இளைஞரான அமன் சிங் குலாட்டி, பாதாமில் ஒரு தனித்துவமான ஓவியத்தை வரைந்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்னர் 19 வயது நிரம்பிய சாதாரண இளைஞராக இருந்த குலாட்டி, இன்று பிரபலமான, உலகின் முதல் பாதாம் ஓவியர் ஆவார். இந்த முறை ஷேக் முகமது அவர்களின் பிறந்தநாளிற்காக இவர் ஷேக் முகமது மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் கை குலுக்கிக் கொள்வது போன்ற ஓவியத்தை இரு நாட்டுக் கொடிகளின் பின்னணியில் பாதாமில் வரைந்துள்ளார்.

இதுவரை ஒருமுறை கூட அமீரகம் வந்திராத குலாட்டி இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் வசித்து வருகிறார். அனைத்து வெளிநாடுவாழ் இந்தியர்களின் சார்பாக இந்தப் பிறந்தநாள் பரிசை ஷேக் முகமது அவர்களுக்கு சமர்ப்பிப்பதாக Gulf News செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி வழி அளித்த பேட்டியில் குலாட்டி தெரிவித்துள்ளார்.

Artist
Image Credit : gulfnews

“அமீரகத்தில் உள்ள இந்திய சமூகத்திற்காக ஏராளமான பணிகளைச் செய்தமைக்காக மாண்புமிகு ஷேக் முகமதுவுக்கு நான் நன்றி கூறுகிறேன்.” என்று பல உலக சாதனைகளைப் படைத்து, தனது படைப்புப் பணிகளுக்காக பாராட்டுக்களைப் பெற்ற இளம் கலைஞரான குலாட்டி தெரிவித்துள்ளார்.

மேலும், “இது என்னைப் பொறுத்தவரை மிகவும் தனித்துவமான ஒரு பரிசுப்பொருளாகும். இதன் மூலம் இந்தியா மற்றும் அமீரக நாடுகளுக்கு இடையிலான நட்புறவை வெளிப்படுத்த வாய்ப்புக் கிடைத்துள்ளதாக நம்புகிறேன். இந்த ஓவியத்தை வரைவதற்கு 20 மணி நேரங்கள் ஆனது.” எனவும் குலாட்டி தெரிவித்துள்ளார்.

“இந்தப் பரிசைப் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும், ஏதாவது ஒரு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தவும் வாய்ப்புக் கிடைத்தால் மிகவும் மகிழ்வேன். இதுகுறித்து நேற்று இரவு ஷேக் முகமது அவர்களின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் அனுப்பியுள்ளேன்.அனைத்து வெளிநாடுவாழ் இந்தியர்களின் சார்பாக வழங்கப்பட்ட இந்தத் தனித்துவமான பரிசுப்பொருளுக்காக நேர்மறையான பதில் கிடைக்கும் என நம்புகிறேன்.” என குலாட்டி கூறியுள்ளார்.

இது பாதாமில் வரையப்பட்ட, ஷேக் முகமது அவர்களின் முதல் ஓவியம் ஆகும்.

குலாட்டி கடந்த ஆண்டு வரைந்த மகாத்மா காந்தியடிகளின் ஓவியம், உலகின் மிகப்பெரிய பென்சில் ஓவியமாக அங்கீகரிக்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.



error: Alert: Content is protected !!