UAE Tamil Web

துபாய்: பணத்திற்காக வயதான இந்தியரை கடுமையாக தாக்கிய கும்பல்..!

HAND CUFF

தனது நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக வங்கியில் இருந்து பணம் எடுக்கச் சென்றிருக்கிறார் 69 வயதான இந்தியர். அல் குசைஸ் பகுதியில் இருந்த வங்கிக்கு வெளியே காரை நிறுத்திவிட்டு, உள்ளே சென்ற இந்தியர் கொஞ்ச நேரத்தில் 190,000 திர்ஹம்ஸ் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வரும்போது எத்தியோப்பியாவைச் சேர்ந்த கும்பல் அவரைத் தாக்கத் துவங்கியிருக்கிறது.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளித்த இந்தியர்,” தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்காக வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். 40 மீட்டர் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரை நோக்கிச் செல்கையில் யாரோ என்னை பின்னாலிருந்து அடித்தார்கள். நான் சுதாரிப்பதற்குள் என் முகத்திலும் நெஞ்சிலும் சிலர் தாக்கினர். இதற்கிடையே ஒருவர் என்னுடைய பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடினார்” என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்ட சம்பவம் நிகழ்ந்துகொண்டிருக்கும் போது, அவ்வழியே ரோந்து சென்ற காவல்துறை அதிகாரி, இந்தியர் தாக்கப்படுவதைப் பார்த்திருக்கிறார். உடனடியாக சம்பவ இடத்தை நோக்கி தனது காரை செலுத்தியிருக்கிறார். அதற்குள் திருட்டுக்கும்பல் காரில் தப்பித்துச் சென்றிருக்கிறது.

காரினை புகைப்படம் எடுத்துக்கொண்ட அதிகாரி, இந்தியரிடம் சென்று அவரை ஆசுவாசப்படுத்தினார். நிதானத்திற்கு வந்தவுடன் நடந்தவற்றை இந்தியர் விவரித்திருக்கிறார். உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த காவல்துறை அதிகாரி, தேடுதல் வேட்டையை துவங்கினார்.

சிசிடிவி காட்சிகள் மூலம், கும்பலை அடையாளம் கண்ட காவல்துறை எளிதாக அவர்களை கைது செய்திருக்கிறது. வங்கியில் இருந்து பணம் எடுத்து வருபவர்களை இலக்காக வைத்து செயல்பட்டதாக கும்பல் தெரிவித்திருக்கிறது.

கொள்ளையடித்த பணத்தை, தனது நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் மூலமாக அமீரகத்திற்கு வெளியே எடுத்துச்சென்று அதன்பின்னர் பங்குபோட்டுக்கொள்வதாகவும் கும்பல் ஒப்புக்கொண்டிருக்கிறது.

இந்த வழக்கில் ஜூலை 6 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

HAND CUFF
0 Shares
Share via
Copy link