34.1 C
Dubai
September 27, 2020
UAE Tamil Web

துபாய் டூட்டி ஃப்ரீயில் நடந்த பரிசுப் போட்டியில் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வென்ற இந்தியர்!

dubai duty free

நேற்று (புதன்கிழமை) துபாய் டூட்டி ஃப்ரீயின் தலைமையகம் அமைந்துள்ள ரமூலில் மில்லினியம் மில்லியனர் மற்றும் ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையை வென்றுள்ளார். வெற்றிபெற்ற மற்ற நான்கு பேருக்கு சொகுசு வாகனங்கள் பரிசாக அறிவிக்கப்பட்டன.

மில்லினியம் மில்லியனர் ப்ரோமொஷனில் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 43 வயதான ராஜன் குரியன் கேரளாவைச் சேர்ந்தவர். ஆன்லைன் மூலமாக இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை குரியன் வாங்கியிருக்கிறார். தொடர் (Series) 330 ல் இவருடைய டிக்கெட் எண் 2852 ஆகும். கேரளாவில் கட்டுமான நிறுவனம் ஒன்றினை நடத்திவரும் குரியன் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் மில்லினியம் மில்லியனர் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை வாங்கிவருகிறார்.

தனது வெற்றி குறித்து மகிழ்ச்சியுடன் பேசிய குரியன்,” பலர் இந்தக் கடினமான சூழலில் பல பிரச்சினைகளோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். குறிப்பாக இந்த பெருநோய் காலம் அனைவரையும் கவலைகொள்ளச் செய்திருக்கிறது. அப்படியான நபர்களுக்கு நான் உதவ வேண்டும் என தோன்றும். இந்த வெற்றியின் மூலம் எனது விருப்பத்தை நிறைவேற்றிய டூட்டி ஃப்ரீக்கு நன்றி “என்றார்.

புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கண்டிப்பான முறையில் சமூக விலகல் விதிமுறை கடைபிடிக்கப்பட்டதை துபாய் டூட்டி ஃப்ரீயின் நிர்வாக துணைத் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான கோம் மெக்லாக்ளின் (Colm McLoughlin), முதன்மை இயக்கு அதிகாரி, ரமேஷ் சிதாம்பி (Ramesh Cidambi) மற்றும் பெருநிறுவன சேவைகள் துறையின் நிர்வாக துணைத் தலைவர், சலாஹ் தஹ்லக் (Salah Tahlak) ஆகியோர் உறுதிசெய்தனர்.

மில்லினியம் மில்லியனர் டிராவைத் தொடர்ந்து ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் டிரா நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற நான்கு நபர்களுக்கு சொகுசு வாகனங்கள் பரிசாக அறிவிக்கப்பட்டன.

குவைத்தைச் சேர்ந்த ஃபராஸ் காலித் (Faraz Khalid) இந்தப் போட்டியின் மூலம் BMW MB50i xDrive  (Adventurine Red) வாகனத்தை பரிசாகப் பெற்றார். காலித் 1751 தொடரில் டிக்கெட் எண் 0123 ஐ வாங்கியிருந்தார். காலித்தை இந்நிகழ்வின்போது தொடர்புகொள்ள முடியாவிட்டாலும், இவ்வெற்றியின் மூலம் நிச்சயம் அவர் மகிழ்ச்சியாக இருந்திருப்பார் என்பது உறுதி.

சுவிஸ் நாட்டின் ஜெனிவாவைச் சேர்ந்த பாக் ஃபேப்ரிஸ் (Bock Fabrice) தொடர் 1752 ல் டிக்கெட் எண் 0607 ஐ ஆன்லைன் மூலமாக வாங்கியிருந்தார். அவருக்கு ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் HSE 5.5 522 HP (Fuji White) வாகனம் பரிசாக அறிவிக்கப்பட்டது.

நிதி நிறுவனமொன்றில் மேலாளராகப் பணிபுரியும் ஃபேப்ரிஸ் கடந்த ஐந்து வருடங்களாக மில்லினியம் மில்லியனர் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை வாங்கிவருகிறார். இவர் 1752 தொடரில் இரண்டு டிக்கெட்டுகளை வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஃபேப்ரிஸ் பேசுகையில்,” பல முயற்சிகளுக்குப் பிறகு நான் வெற்றியடைந்துள்ளேன். இந்த வெற்றியை ஆரம்பத்தில் என்னால் நம்பவே முடியவில்லை. ஆனால் நான் வெற்றிபெற்றிருக்கிறேன். துபாய் டூட்டி ஃப்ரீக்கு நன்றி” என்றார்.

எகிப்தைச் சேர்ந்த 39 வயதான ஒமர் அபோஷாதி (Omar Aboushady) இந்நிகழ்ச்சி மூலம் Indian Chief Darkhorse என்னும் மோட்டார் பைக்கை பரிசாகப் பெற்றிருக்கிறார். இவர் 408 தொடரின் 0623 எண் கொண்ட டிக்கெட்டினை வாங்கியிருந்தார்.

கடந்த ஒரு வருடம் மற்றும் ஒன்பது மாதமாக துபாயில் வசித்துவரும் ஒமர், ஆன்லைன் மூலமாக இதே தொடரின் ஐந்து டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார். இவர் ஏர் கண்டிஷனிங் வேலை செய்துவருகிறார்.

இதுகுறித்து பேசிய ஒமர்,” இந்தக் கடினமான வாழ்க்கைச் சூழலில் எனக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த துபாய் டூட்டி ஃப்ரீக்கு நன்றி. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார்.

இந்தியாவைச் சேர்ந்த சையத் ஹைத்ரோஸ் அப்துல்லா (Syed Hydrose Abdulla) தொடர் 409 ல்  டிக்கெட் எண் 0687 ஐ ஆன்லைன் மூலமாக வாங்கியிருந்தார். அவருக்கு BMW RI250 RS (Austin Yellow) வாகனம் பரிசாகக் கிடைத்தது.

57 வயதான சையத் கடந்த 30 வருடங்களாக துபாயில் வசித்துவருகிறார். இவர் கோகோ கோலா நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.

இதுகுறித்துப் பேசிய சையத்,” ப்ரோமோஷன்ஸ் மூலம் நான் உட்பட பல மக்களை மகிழ்விக்கும் துபாய் டூட்டி ஃப்ரீக்கு நன்றி” என்றார்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!