தங்களது துறைகளில் சாதித்த, அறிவியலாளர்கள், கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கு அமீரக அரசு 10 வருடத்திற்கான கோல்டன் விசாவை வழங்கிவருகிறது. அதன்படி இந்தியாவின் சஞ்சய் தத், மோகன்லால், மம்மூட்டி, துல்கர் சல்மான், டோவினோ தாமஸ், ஊர்வசி, மீரா ஜாஸ்மின் ஆகிய திரைப் பிரபலங்களுக்கு இதுவரையில் கோல்டன் விசா வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த பட்டியலில் தற்போது சேர்ந்திருக்கிறார் பத்மஸ்ரீ சந்தோஷ் சிவன். இந்தியாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளராக அறியப்படும் இவருக்கு இன்று 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா வழங்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்துப் பேசிய அவர்,” தங்களது நாட்டினர் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள கலைஞர்களை சிறப்பிக்கும் விதமாக அவர்களுக்கு 10 வருடத்திற்கான கோல்டன் விசா வழங்கும் ஆட்சியாளர்களின் முடிவு வரவேற்கத்தக்கது. எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் அமீரகமும் ஒன்று. இந்த விசா எனக்களிக்கப்பட்டது உண்மையிலேயே எனக்கு பெருமகிழ்ச்சியைத் தருகிறது. இதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி” எனக் கூறிப்பிட்டுள்ளார்.
