UAE Tamil Web

துபாயில் பராமரிப்புப் பணியாளராகப் பணிபுரியும் இந்தியர் நடைபாதையில் வரைந்த இதயம் – வைரலான புகைப்படம்..!

cleaner heart

துபாயில் பராமரிப்பு உதவியாளராக பணிபுரிந்துவரும் இந்திய மாநிலமான தெலுங்கானாவைச் சேர்ந்த ரமேஷ் கங்கராஜம் காந்தி தனது மாலை ஷிப்ட்டின் போது, நடைபாதைகளில் உதிர்ந்து கிடந்த மலர் இதழ்களையும், காற்றினால் கீழே விழுந்த கிளைகளையும் பார்த்தார். உடனே அவருக்கு தன் தாய் மற்றும் தந்தையின் நினைவும், ஓமனில் இருக்கும் தன் சகோதரர்களின் நினைவும், ஒரு வருடமாக நேரில் காணாமல் பிரிந்திருக்கும் தன் மனைவியின் நினைவும் வந்திருக்கிறது.

தன்னையறியாமல் உதிர்ந்து கிடந்த பூவிதழ்களைச் சேகரித்து மிகவும் பழக்கப்பட்ட ஒரு வடிவத்தை வரைந்திருக்கிறார். “நான் இந்த இதயத்தை வரைந்தபோது என் மனைவியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். நான் அவளின் பிரிவால் வருந்துகிறேன். ஆனால் நான் அவளை நேசிக்கிறேன் என்று அவளுக்குத் தெரியும், எப்போதும் அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்றும் அவளுக்குத் தெரியும்.” என புதிதாகத் திருமணமான ரமேஷ் கல்ஃப் செய்திகளுக்கு அளித்த எழுத்துப்பூர்வமான பேட்டியில் தெரிவித்துள்ளார்.

2019 செப்டம்பரில் லதா எனும் பெண்ணை ரமேஷ் மணந்திருக்கிறார். திருமணமான ஒரு மாதத்தில், அவருக்கு ஃபெசிலிட்டி மேனேஜ்மெண்ட் நிறுவனமான எம்ரில் நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் அமீரகம் வந்துள்ளார்.

“நான் நேற்று என் மனைவி லதாவுடன் பேசினேன். நிறைய பேர் என் புகைப்படத்தையும் அதிலிருக்கும் நான் வரைந்த இதயத்தையும் பார்த்ததாக அவளிடம் சொன்னேன். நான் அவளைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பது அவளை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. எங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள எத்தனை பேர் ஆர்வமாக உள்ளனர் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. உண்மையில் நான் இதயத்தை வரைந்த போது யாரோ என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது எனக்குத் தெரியாது. எனவே எனக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.” என்று ரமேஷ் கூறியுள்ளார்.

dubai cleaner
Image Credit: Ermill

துபாயின் டவுன்டவுனில் ஒரு அலுவலக ஊழியர் அவர் செயலை கவனித்து விரைவாக ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். பிறகு இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட இந்தப் புகைப்படம் வைரலாகியுள்ளது.

பிரபலமான அவரது புகைப்படம் தான் சோகமாக இருந்த ஒரு தருணத்தில் எடுக்கப்பட்டது என யாரும் நினைப்பதை அவர் விரும்பவில்லை. “புகைப்படத்தைப் பார்த்தவர்கள், நான் சோகமாக இருக்கிறேன். அதனால்தான் அந்த இதயத்தை வரைந்தேன் என நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன். எனக்கு ஒரு நல்ல வேலை இருக்கிறது, ஒவ்வொரு நாளும் நான் மிகவும் மகிழ்வுடன் வேலைக்குச் செல்கிறேன். நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். எனக்கு மனைவியும், குடும்பமும் உள்ளனர். நான் நன்றி சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.” என்று ரமேஷ் மென்மையான குரலில் விளக்குகிறார்.

அவர் மேலும் கூறியதாவது, “இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட நாளில் நான் வீட்டிலிருக்கும் அனைவரையும் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இந்தத் தொற்றுநோய் காலத்தில் என் குடும்பத்திலிருந்து விலகி இருப்பது கடினமானதாக உள்ளது. இங்கு என்னைப்போல நிறைய பேர் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் COVID-19 குறித்த கவலைகளோடு அவர்கள் விரும்பும் நபர்களிடமிருந்து விலகி இருக்கிறார்கள். அது இயல்புதான். நாங்கள் அனைவரும் எங்கள் குடும்பங்களுடன் நேரத்தைச் செலவிட விரும்புகிறோம். ஆனால், பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக அது தற்பொழுது சாத்தியமற்றது.”

ஆனால், ரமேஷைப் பொறுத்தவரை இந்த நிலை மாறப் போகிறது. அவர் அடுத்த மாதம் தனது குடும்பத்தினருடன் சிறிது காலம் செலவிட இருக்கிறார். “நான் ஆகஸ்டில் எனது மனைவியையும் குடும்பத்தினரையும் காண வீட்டிற்குச் செல்ல விடுப்பு எடுக்கப் போகிறேன். என் தந்தைக்கு வயதாகி விட்டது. அவர் உடல்நலக் குறைவோடு இருக்கிறார். என் சகோதரர்கள் ஓமனில் வேலை செய்கிறார்கள். எனவே நான் என் பெற்றோருக்கு உதவுவதற்காக சிறிது காலம் செலவழிக்கப் போகிறேன். நான் என் மனைவியுடன் அதிக நேரம் செலவிட முடியும் என்பதை நினைக்கையில் மகிழ்ச்சியாக உள்ளது.” என்று அவர் கூறியுள்ளார். ரமேஷ் தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தைக் கேட்டபோது, ​​துரதிர்ஷ்டவசமாக தன்னிடம் ஒன்றும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.error: Alert: Content is protected !!