UAE Tamil Web

“இவ்வளவு காஸ்ட்லி-னு தெரியாது..அதுதான் தூக்கிப் போட்டுட்டோம்” – குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட 10 ஆயிரம் திர்ஹம்ஸ் மதிப்புள்ள பொருள் – வினோத வழக்கில் கைதான 2 இந்தியர்கள்..!

dubaicourt

10,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள ஹேண்ட்பேக்கை திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட இரு இந்தியர்கள் மீதான வழக்கு இன்று துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த அக்டோபர் மாதம் அல் பார்ஷா பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவரும் ஒரு பெண், தனது வீட்டினை சுத்தப்படுத்த தொழிலார்களை அனுப்புமாறு தூய்மைப் பணிகளை மேற்கொண்டுவரும் நிறுவனத்தினை தொடர்புகொண்டுள்ளார்.

இதனையடுத்து 32 மற்றும் 27 வயதுள்ள இரு இந்தியர்கள் பெண்ணுடைய வீட்டிற்கு சென்றுள்ளனர். பணிமுடித்து அவர்கள் திரும்பியதும் வீட்டில் வைத்திருந்த 10,000 மதிப்புள்ள ஹேண்ட்பேக் காணாமல் போனதாக, தூய்மை நிறுவனத்திடம் புகார் கொடுத்திருக்கிறார் பெண்.

“பணியாளர்கள் சென்ற பிறகு, லிவிங் அறைக்கும் கழிப்பறைக்கும் இடையே இருந்த என்னுடைய ஹேண்ட்பேக்கை காணவில்லை. கேட்டதற்கு குப்பைத் தொட்டியில் வீசிவிட்டதாக தெரிவித்தனர்” என அந்தப் பெண் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து காவல்நிலையத்தில் அவர் புகாரும் கொடுத்திருக்கிறார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் அதிகாரிகள், நிறுவனத்தின் மேனேஜரை தொடர்புகொண்டு பேசினார்கள். அப்போது, இரு பணியாளர்களும் அந்த ஹேண்ட்பேக்கை குப்பை என நினைத்து குடியிருப்பு வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் வீசியதாக அவர் தெரிவித்தார்.

அப்பார்ட்மென்ட் காவலர்களும் இதனை உறுதிபடுத்தியுள்ளனர். ஹேண்ட்பேக்கும் அந்த குப்பைத் தொட்டிக்குள் தான் இருந்திருக்கிறது. அதன்பின்னர் நகராட்சிப் பணியாளர்கள் குப்பைத் தொட்டியில் உள்ள கழிவுகளை எடுத்துச் சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.

இவ்வழக்கின் தீர்ப்பு ஜூன் 14 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.