UAE Tamil Web

“நான் இந்தியாவில் தான் இறக்க விரும்புகிறேன்” – 50 வருடத்திற்குப் பின்னர் அமீரகத்திலிருந்து தாயகம் திரும்பும் இந்தியர்..!

Raghavan-

“திரும்பிச் செல்ல வீடு இருக்கிறது” என்பது மட்டும் தான் பெரும்பயணங்களை மேற்கொள்ளும் மக்களுக்கு வழித்துணையாய் இருக்கிறது. வயோதிகமும் வாழ்ந்த வாழ்வின் மீதான சலிப்பும் மேலிடும்போது அரவணைக்கும் கைகளுக்குள் அகப்பட்டுக்கொள்ள மனம் துடியாய்த் துடிக்கிறது. அப்படி திரும்பிச்செல்லும் மனிதர்களுள் ஒருவர்தான் ராகவன் (80).

கட்டுமரத்தை மட்டும் நம்பி கேரளாவில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கியவர் கடலலைகளை தன் வல்லமையால் கடந்து 1968 ஆம் ஆண்டு அமீரகத்தில் கால் பதித்தார் ராகவன். சாதிக்க மனத்தில் திடம் இருந்தது. சோதனைகளை எதிர்கொள்ள உடம்பில் தெம்பு இருந்தது. துபாயில் இரண்டு தையல் கடைகள் அதன் பின்னர் அஜ்மானில் வர்த்தக நிறுவனம் என வாழ்க்கையில் ஏணிப்படிகளை மட்டுமே சந்தித்த ராகவன் முதன் முறையாக வீழ்ச்சியைப் பார்த்தார்.

வாழ்நாளில் சம்பாதித்த அனைத்தும் கண்முன்னே காலியாவதைப் பார்த்து பார்த்து மனம் நொந்ததினால் உடல் தன் பங்கிற்கு கவலைக்கிடமானது. கிட்டத்தட்ட உடலின் இயக்கம் பாதி செயலிழந்தது. ஒரு பக்கம் கடன். செலுத்தவேண்டிய வாடகை பாக்கி, விசா அபராதம் என வாழ்வின் மீதான அழுத்தங்கள் குறைந்ததாகத் தெரியவில்லை.

“அடர் இருளில் சின்னஞ்சிறு மின்மினிகள் கூட சொர்க்கத்துக்கு வழிகாட்டும்” என்பதைப்போல அமீரக வாழ் இந்தியர்கள் ராகவனுக்காக ஒன்றிணைந்தார்கள். அவருடைய மொத்த கடனான 104,000 திர்ஹம்ஸ் பல்வேறு நிறுவனங்களின் உதவியுடன் 59,000 திர்ஹம்சாக ஆனது. அவையும் ராகவனின் உடல்நிலையைக்கண்டு அன்புள்ளம் கொண்டவர்களால் அடைக்கப்பட்டது.

கீழேயுள்ள புகைப்படத்தில் இடப்பக்கம் இருப்பவர் சசிகுமார். வலப்பக்கத்தில் நிற்பவர் கிரண் ரவீந்திரன். இருவருமே ராகவனின் அன்றாட செலவுகளுக்கு உதவிவந்தனர். ராகவனின் மருத்துவ செலவுகளை சம்ஷீர் மற்றும் ஷாஜி அம்மன்னூர் ஆகிய இருவரும் ஏற்றுக்கொண்டனர்.

NAT-K.-Raghavan 1
Image Credit: Gulf News

இதில் ஆர்ஜே ஃபஸ்லு (RJ Fazlu) என்பவர் அமீரக வாழ் கேரள மக்களை ஒன்றிணைத்து ராகவனுக்காக நிதி திரட்டினார். மொத்த வசூல் 48,000 திர்ஹம்ஸ். இன்னும் கொஞ்ச தூரம் தான். ராகவனின் சுதந்திரத்தின் கதவுகள் திறக்கப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை விரைவில் அனைவரும் அறிந்துகொண்டனர். அந்த உதவி வாட்சாப் மூலமாக வந்தது.

வாழ்க்கை தந்த வாட்சாப்

Change A Life, Save A Life என்பதுதான் அந்த வாட்சாப் குரூப். வாழ்விற்கான வெளிச்சத்தை அந்தகாரத்திலிருந்தே உருவாக்கிக்கொள்ளலாம் என்னும் எண்ணம் கொண்டவர்களின் கைகளில் இருந்து சிறுக சிறுக வந்த துளிகள் பெருகி பெருவெள்ளம் ஆனபோது இந்தியாவிற்குக் கிளம்புவதற்கான ஆடைகளை அணிந்திருந்தார் ராகவன்.

மருத்துவமனையில் வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையே போராட்டம் நடத்தி, கடைசிச் சுற்றில் வென்றவரைக் காண அமீரகம் வந்தார் அவரது மனைவி சரோஜினி. அவர் வாழ்வில் இருந்து யாராலும் எடுத்துக்கொள்ள முடியாத அவரது செல்வம் அவரது மனைவி தான். சிறிய அறை. இருந்தால் என்ன? பகிர்ந்துகொள்ள மொத்த வாழ்க்கை இருக்கிறது என ராகவனுக்கு எல்லாமுமாய் இருந்தார் சரோஜினி.

எல்லா கடனும் அடைக்கப்பட்டுவிட்டது. எல்லா அபராதமும் சரிகட்டப்பட்டுவிட்டது என நண்பர்கள் சொல்லும்போது ராகவன் வாழ்வில் தான் மிகவும் எதிர்பார்த்திருந்த, மிகவும் ஏங்கிப் போயிருந்த அந்த தருணத்தில் திளைத்திருந்தார். கட்டுப்படுத்தமுடியாமல் கண்ணிலிருந்து கண்ணீர் கசியத் துவங்கியது. தனக்கு உதவிசெய்தவர்களுக்கு விமான நிலையத்தில் இருந்தபடி வீடியோ மூலம் ராகவன் இப்படிப் பேசினார்.

“என்னுடைய கடன்களையும் அபராதங்களையும் அடைக்க பணமளித்த உங்களது ஒவ்வொருவரையும் நான் என்னுடைய வாழ்வின் அத்தனை நாட்களிலும் நினைத்திருப்பேன். எனது மரணம் தாயகத்தில் நிகழ விரும்புகிறேன். நான் இந்தியாவிற்குச் செல்கிறேன். அனைவருக்கும் நன்றி” என்றார்.

ராகவன் தனது வீட்டிற்குத் திரும்புகிறார். ஆம், தன்னுடைய பெரும்பயணத்தை முடித்துவிட்டு ஓய்வெடுக்க திரும்பிச் செல்கிறார்.

Raghavan-
0 Shares
Share via
Copy link