துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம், அமீரகத்தில் தங்கி பணியாற்றும் இந்தியர்கள் குறிப்பாக தொழிலாளர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான நடைமுறைகளை பிரவசி பாரதிய சஹாயாத கேந்திரா (PBSK) மூலம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அமீரகத்தில் பாதுகாப்பான முறையில் வாழ்வதற்கும் சட்ட விதிகளை பின்பற்றி நடந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாலியல் அத்துமீறல், வன்கொடுமை, கொத்தடிமைத்தனம், விதிமீறல் உள்ளிட்டவைகளில் இருந்து இந்தியர்களை பாதுகாக்கும் விதமாக இந்த பாதுகாப்பு நடைமுறைகளை இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் அன்றாடம் அமீரகத்தில் நிலவும் சூழல் மற்றும் சட்ட திட்டங்களை அறிந்து கொள்ள இந்தியர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய துணைத் தூதரகத்தின் அறிவுரைகள்..
அமீரக வாழ் இந்தியர்கள் செய்ய வேண்டியது
- அமீரகத்தின் சட்ட விதிகளை முறையாக அறிதல், வெளிநாட்டினரின் உரிமைகள் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் குறித்து தெளிவு பெறுதல்.
- துபாய் நகரத்தின் அவசர கால தொடர்பு எண்களை அறிந்து வைத்தல். போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு, இந்திய தூதரகம், வெளிநாட்டு வாழ் இந்திய அமைப்பு உள்ளிட்டவற்றின் தொடர்பு எண்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
- பாலியல் அத்துமீறல் அல்லது தனி நபர் தாக்குதல் ஏதேனும் நேரிட்டால் உடனடியாக காவல்துறையை அணுக வேண்டும்.
- வேலை சம்மந்தமான குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் அதனை உடனடியாக வேலைக்கான அனுமதி (work permit) முடிவதற்குள் மனிதவள மேம்பாட்டு மற்றும் எமிராட்டிசேஷன் (MoHRE) அமைச்சகத்திடம் முறையிட வேண்டும்.
- மருத்துவச் சான்றிதழ், பாஸ்போர்ட், விசா, கம்பெனி அடையாள அட்டை, தூதரக தொடர்பு எண் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எப்போதும் உடன் வைத்துக் கொள்வது அவசியம். நெருங்கிய உறவுகளிடமும் கொடுத்து வைப்பது அவசர காலங்களில் உதவும்.
- ஊருக்கு பணம் அனுப்புவதற்கும் பெறுவதற்கும் முறையான விதிகளைப் பின்பற்ற வேண்டும், பென்ஷன் போன்ற சேமிப்புகளில் கவனம் செலுத்துவது அவசியம்.
- சமூக விரோதிகளிடம் இருந்து கவனமாக நடந்து கொள்ள வேண்டும். எக்காரணத்தையும் கொண்டும் பாஸ்போர்ட், எமிரேட்ஸ் ஐடி, சிம் கார்ட் மற்றும் முக்கிய ஆவணங்களை முகம் தெரியாத, முன் பின் அறியாதவர்களிடம் பகிரக்கூடாது.
- உடல் நலனில் அக்கறை செலுத்தி காப்பீடு செய்து கொள்ள வேண்டும். வேலைக்கேற்றார் போல யோகா, உடற்பயிற்சி உள்ளிட்டவைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அமீரக வாழ் இந்தியர்கள் செய்யக்கூடாதவை
- சமூக வலைத்தளங்களில் பிற மதத்தினரை இழிவுபடுத்தும் விதமாகவோ பிரிவினையை ஏற்படுத்தும் விதமாகவோ கருத்து பதிவிடக்கூடாது.
- பாரம்பரியம், கலாச்சாரம் உள்ளிட்ட மண் சார்ந்த விழுமியங்களை சீர்குலைக்கக்கூடாது
- தடை செய்யப்பட்ட பகுதிகளை புகைப்படம் எடுக்கக்கூடாது. எக்காரணத்தை கொண்டும் பிறரின் புகைப்படங்கள், வீடியோக்களை அவர்கள் அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் பகிரக்கூடாது.
- OTP, பேங்க் பாஸ்வேர்ட், ஏ.டி.எம். பின் உள்ளிட்ட ரகசிய குறியீட்டு எண்களை வேறு யாரிடமும் பகிரக்கூடாது. தொலைப்பேசி வாயிலாக வங்கிகள் இதனை ஒருபோதும் கேட்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
- பொதுவெளியில் மது அருந்தக்கூடாது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் அருந்தலாம்.
- ஸ்பான்சரிடம் இருந்து தப்பித்து ஓடக்கூடாது. ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் இந்திய தூதரகம் அல்லது மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தை (MOHRE) 80060 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும்