UAE Tamil Web

“நீண்டநேரம் கதவைத் தட்டிய பின்னரே உடைத்துக்கொண்டு உள்ளே சென்றேன்” – இந்தியாவைச் சேர்ந்த பொறியியல் மாணவனின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்..!

Sharjah-Police_

துபாயில் கணிப்பொறியியல் இறுதியாண்டு படித்துவந்த ஜியோத் என்னும் 21 வயது இந்திய இளைஞரின் மரணம் பல்வேறு சந்தேக அலைகளை எழுப்பியுள்ளது. கடந்த நவம்பர் 2 ஆம் தேதி, ஷார்ஜாவின் அல் ரோலா பகுதியில் உள்ள தங்களது வில்லாவில் சீலிங் ஃபேனில் தூக்கிட்டுக்கொண்டார் ஜியோத்.

- Advertisment -

அன்றைய தினம் அவரது பெற்றோர் அல் அய்னுக்கு சென்றிருக்கிறார்கள். அப்போது வீட்டிற்கு வந்த ஜியோதின் மூத்த சகோதரர் நிரல், வீட்டின் கதவுகளை தட்டிப் பார்த்திருக்கிறார். வெகுநேரமாக எவ்வித பதிலும் இல்லாததால், கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றிருக்கிறார் நிரல்.

அப்போது தான் தனது அறையில் தூக்கில் ஊசலாடிய தனது சகோதரனின் உடலைப் பார்த்திருக்கிறார். உடனடியாக காவல்துறைக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படவே, தடயவியல் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்திருக்கின்றனர்.

தற்போது இந்த வழக்கு பொதுவழக்கு விசாரணையில் உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒன்றும் புரியவில்லை

“எங்களால் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. அவனுக்குள் (ஜியோத்) என்ன கஷ்டம் இருந்திருக்கும் என்பதை நாங்கள் சிந்தித்துக்கொண்டே இருக்கிறோம். எங்களுக்கு எதுவும் புரியவில்லை. எங்களிடம் எப்போதும்போலவே இருந்தான் அவன். இந்த கொடுந்துயரிலிருந்து வெளிவர நீண்டகாலம் ஆகும்” என நிரல் தெரிவித்தார்.

ஜோயோத் பயின்ற கல்லூரியில் நடத்தப்பட்ட விசாரணையிலும் எவ்வித தகவலும் காவல்துறைக்குக் கிடைக்கவில்லை. ஜியோத் படிப்பில் சிறந்து விளங்கியதாகவும், அனைத்து ஆசிரியர்களின் விருப்பத்திற்கு உரிய மாணவனாக ஜியோத் இருந்ததாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

ஜியோதின் பள்ளி நண்பர் ஒருவர்,” எனக்கு இந்த துர் நிகழ்வு குறித்து தகவல் கிடைக்கவில்லை. அவன் (ஜியோத்) என்னுடன் மிகுந்த அன்புடன் பழகுவான். எப்படி இந்த துயரிலிருந்து மீளப்போகிறேன் என்பது தெரியவில்லை” என்றார்.

தடயவியல் துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையிலும் இது தற்கொலை தான் என்றும், அதில் வேறெந்த குழப்பங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பாராத நேரத்தில் நிகழ்ந்த இந்த மரணத்தின் காரணமாக ஜியோதின் குடும்பத்தினர், நண்பர்கள், பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகம் சோகத்தில் மூழ்கியுள்ளன. ஆனால், ஜியோதின் இந்த முடிவிற்குக் காரணம் என்ன? என்பது மட்டும் இன்னும் கேள்வியாகவே எஞ்சுகிறது.