துபாயில் மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்த இந்தியர்.!

KNIFE WITH BLOOD

விசிட் விசாவில் துபாய்க்கு வந்த ஒரு இந்திய நபர், தனது மனைவியை சந்தேகத்தின் பேரில் கொலை செய்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

துபாய் முதல் நிகழ்வு நீதிமன்றத்தின் விசாரணையில் தனது மனைவி தன்னை ஏமாற்றுகிறாரா என்ற சந்தேகத்தின் பேரில் அவரைக் கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது.

பொது வழக்கு பதிவுகளின்படி, திட்டமிட்ட கொலைக் குற்றச்சாட்டில் விசாரணைக்கு வந்துள்ள 44 வயதான அந்த இந்திய ஆண் அளித்த வாக்குமூலத்தில், கடந்த ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி அல் குவோஸ் தொழில்துறை பகுதியில் உள்ள தனது மனைவியின் பணியிடத்திற்குச் அவர் சென்றுள்ளார். மனைவி பணிபுரியும் அலுவலகத்தின் முதலாளியிடம் “எதற்காக என் மனைவி உங்களுக்கு மெசேஜ் அனுப்பினார்? என் மனைவிக்கும் வேறொருவருக்கும் தகாத தொடர்பு உள்ளது. அவள் என்னை ஏமாற்றுகிறாள்” என்று அனைவர் முன்னிலையிலும் அசிங்க படுத்தியுள்ளார். கணவனின் இச்செயலினால் ஆத்திரமடைந்த மனைவி அலுவலகத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

அவரை பின்தொடர்ந்த கணவருக்கும் மனைவிக்கும் பிறகு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலாளருக்கு முன்னால் தனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதற்காக மிகவும் வருத்தம் தெரிவித்து கணவரை குற்றம் சாட்டினார் அந்த பெண். இதனால் ஆத்திரமடைந்த கணவர் ஒரு கத்தியை எடுத்து மனைவியை மூன்று முறை குத்தி, சம்பவ இடத்திலேயே கொன்றார்.

பின்னர் குற்றம் நடந்த இடத்தில் ஆய்வு செய்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் “அந்த பெண் வாகன நிறுத்துமிடத்தில் கார்களுக்கிடையில் உயிரற்ற நிலையில் கிடந்தார். அவரது அடிவயிற்றிலும் இடது தொடையிலும் ஆழமான கத்திக் காயங்கள் இருந்தன. மேலும் அவரது உடல் அருகே உபயோகப்படுத்தப்பட்ட ஆயுதமும் கண்டுபிடிக்கப்பட்டது.” என்றார்.

இது குறித்து 32 வயதுடைய அந்த நிறுவனத்தின் மேலாளர் வழக்கறிஞரிடம் “அந்த பெண்ணை என்னால் அவரது தொலைபேசிக்கும் மற்றும் அலுவலக தொலைபேசிக்கும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் ஒரு வாடிக்கையாளருக்கு விலை பட்டியலை அனுப்ப வேண்டும் என்று நான் விரும்பியதால் என்னை அழைக்கும்படி அந்த பெண்ணிடம் கூறுமாறு நிறுவனத்தின் டிரைவரை அனுப்பினேன்.” என்று கூறினார்.

அதன் பின் “அந்த ஓட்டுநர் சில நிமிடங்கள் கழித்து என்னை திரும்ப அழைத்தார். அந்த பெண் அலுவலகத்திற்கு வெளியே இரத்த வெள்ளத்தில் இருப்பதாக கூறினார். உடனே நான் அங்கு சென்று அந்தப்பெண் படுகாயமடைந்ததைக் கண்டேன். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் ஏற்கனவே இறந்துவிட்டார்.” என்று கூறினார்.

அதன் பின் அவர்கள் போலீசிற்கு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தான் பிரதிவாதி வருகை விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்ததாக பொது வழக்கு பதிவுகள் காட்டுகின்றன.

சம்பவம் நடந்த உடனே, அந்த கணவர் மெட்ரோவில் ஜெபல் அலிக்கு தப்பித்து சென்றுள்ளார். அவரை கையும் களவுமாக பிடிக்க அதிகாரிகள் துபாய் முழுவதும் ஒரு தேடுதல் வேட்டையை தொடங்கினர். பின்னர் போலீஸ் ரோந்துப் படையினர் அந்த பகுதியின் சாலையில் கையில் ஒரு பையுடன் சுற்றி கொண்டிருந்த அவரைக் கைது செய்தனர். தற்போது அவர் போலீஸ் காவலில் இருக்கிறார்.

இந்த தம்பதியருக்கு இந்தியாவில் இரண்டு மகள்கள் உள்ளனர். உயிரிழந்த அந்த பெண் சுமார் ஒரு வருடம் முன்னதாக ஐக்கிய அமீரகத்திற்கு பணிக்காக வந்து ஒரு பெண் சக ஊழியருடன் தங்குமிடம் பகிர்ந்து கொண்டிருந்துள்ளார். கணவர் அபுதாபியின் அல் முசாபாவில் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கின் விசாரணை மார்ச் 2 ம் தேதி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading...