UAE Tamil Web

“என்னுடைய மறுபிறப்பு இது” : லூலூ மால் உரிமையாளரின் கருணையினால் விடுதலை செய்யப்பட்ட மரணதண்டனைக் கைதி கிருஷ்ணன் கண்ணீருடன் இந்தியா திரும்பினார்..!

Krishnan

துப்பாக்கியால் சுடப்பட்டு மரணதண்டனை. இதுதான் கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்ட தண்டனை. 12 வயது சிறுவன் உயிரிழக்கக் காரணமாக அமைந்த விபத்தினை ஏற்படுத்திய குற்றத்தில் கிருஷ்ணனுக்கு அமீரக உச்ச நீதிமன்றம் இதனை வழங்கியது. 9 வருடமாக ஜெயிலில் வாடிய அவருடைய வாழ்க்கையில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியிருக்கிறார் லூலூ மாலின் அதிபர் திரு.யூசப் அலி.

5 லட்சம் திர்ஹம்ஸ் பணத்தை இழப்பீடாக அளித்து, இறந்துபோன சிறுவனின் பெற்றோர் கிருஷ்ணனை மன்னிக்கவும் பல முயற்சிகளை அவர் மேற்கொண்டிருக்கிறார். இறுதியில் சிறுவனின் பெற்றோரும் கிருஷ்ணனை மன்னிக்கவே, அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

அபுதாபியின் அல் வத்பா சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்த கிருஷ்ணன்,”இது எனக்கு மறுபிறப்பாகும். என்னுடைய விடுதலைக்கு உதவிய யூசப் அலியின் உதவியை எனது வாழ்நாள் முழுவதும் நினைத்திருப்பேன்” என கண்ணீருடன் தெரிவித்தார்.

வீடியோ மூலமாக நன்றி தெரிவித்துள்ள கிருஷ்ணனின் குடும்ப உறுப்பினர்கள் அவரது வருகையை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாகத் தெரிவித்தனர்.

கிருஷ்ணனின் சகோதரர் பின்சன்,”லூலூ குழுமம் செய்த இந்த உதவி மகத்தானது” என்றார். கிருஷ்ணனின் மனைவி வீனா இதுகுறித்துப் பேசுகையில்,” யூசப் அலி எனது கணவரை விடுதலை செய்ய நிச்சயம் உதவுவார் என அனைவரும் எனக்கு நம்பிக்கையூட்டினர். அது வீண்போகவில்லை” என்றார்.

இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். தனது நான்காவது வயதில் தான் கடைசியாக தனது தந்தையை அவர் பார்த்திருக்கிறார்.

இதுகுறித்துப் பேசிய கிருஷ்ணனின் தாய் சந்திரிகா,” விபத்துக் குறித்து அறிந்தவுடன் நாங்கள் நொறுங்கிப் போனோம். எப்படி எனது மகனை வெளியே கொண்டுவருவது எனத் தெரியாமல் தவித்தோம். இழப்பீட்டுத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டிருந்த பணம் எங்களால் கனவில் கூட நினைத்துப்பார்க்க முடியாததாகும்”

“இறுதியில் யூசப் அலி இதில் உதவ முன்வந்தவுடன் எங்களுக்கு நம்பிக்கை வந்தது. எங்களுடைய வாழ்வில் அவர் ஒரு கடவுள் போல வந்தார். எனது வாழ்வின் இறுதிமூச்சுவரை அவரின் உதவியை நினைத்திருப்பேன்” என கட்டுப்படுத்தமுடியாத அழுகையுடன் தெரிவித்தார்.

இதனிடையே, கடவுளுக்கும் அமீரக ஆட்சியாளர்களுக்கும் நன்றி தெரிவித்த யூசப் அலி, கிருஷ்ணன் தனது புது வாழ்க்கையை வளமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்திட வாழ்த்துவதாகத் தெரிவித்தார்.

இன்று இரவு அமீரகத்தில் இருந்து தனது சொந்த ஊரான கேரளத்திற்குச் செல்கிறார் கிருஷ்ணன். தூதரக அதிகாரிகளிடத்தில் கண்ணீர் வழியப் பேசிய அவர்,” இது என்னுடைய மறுபிறப்பாகும். என்னுடைய நம்பிக்கை அனைத்தையும் இழந்திருந்த தருணத்தில் எனக்கு இந்தப் புதுவாழ்வு கிடைத்திருக்கிறது. எனது வாழ்வின் ஒவ்வொரு நாளும் யூசப் அலியின் உதவிக்கு நன்றி சொல்வேன். எனது குடும்பத்தைக் காணச் செல்கிறேன் என்பதை நினைக்கவே சிலிர்க்கிறது” என்றார்.