UAE Tamil Web

100 நாள் சிகிச்சை ; 5.7 லட்சம் திர்ஹம்ஸ் கட்டணம் – காசில்லாமல் கஷ்டப்பட்ட இந்தியத் தொழிலாளியை தாயகத்திற்கு அனுப்பிவைத்த துணைத் தூதரகம்..!

Moideen

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மொய்தீன்குட்டி செருக்காத். இவர் கடந்த 26 வருடங்களாக அமீரகத்தில் ஏமிராட்டி ஒருவருடைய வீட்டில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வந்திருக்கிறார். இவருடைய இரண்டு குழந்தைகளும் கேரளாவில் படித்துவருகின்றனர். குடும்பத்தின் ஒரே வருவாய் மூலமாக இருந்த மொய்தீனுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு கைகளில் கடுமையான வலி ஏற்பட்டிருக்கிறது.

இதனையடுத்து அஸ்தர் மன்கூல் மருத்துவமனைக்கு அவசர சேவை மூலமாக அழைத்துச்செல்லப்பட்ட மொய்தீனுக்கு இதயத்தில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருடைய இதயத்துடிப்பு மாறுபட்ட வேகத்தில் இருப்பதைக் கவனித்த மருத்துவர்கள், அவரிடம் நிலையை விளக்கியுள்ளனர்.

தாயகம் திரும்பி இதற்கான சிகிச்சையை தொடரும்படி மருத்துவர்கள் வலியுறுத்தவே, சொந்த ஊர் திரும்பும் சந்தோஷத்தில் இருந்திருக்கிறார் மொய்தீன். ஆனால் அந்த சந்தோசம் வெகுநாட்கள் நீடிக்கவில்லை. மீண்டும் அவருடைய உடல்நிலை மோசமாகியது. அதே மருத்துவமனையில் மொய்தீன் சேர்க்கப்பட்டார்.

அவரிடத்தில் இன்சூரன்ஸ் இல்லாத காரணத்தினால், அவருடைய மருத்துவ கட்டணங்களை செலுத்துவது குறித்து கேள்வி எழுந்தாலும் மருத்துவமனை நிர்வாகம் அவருக்கான சிகிச்சையை நிறுத்தவில்லை. கிட்டத்தட்ட 120 நாள் சிகிச்சைக்குப் பிறகு அவருடைய உடல்நிலை இந்தியா திரும்பும் அளவிற்கு முன்னேறியது.

மொய்தீனுக்கான மருத்துவ கட்டணமாக 5.7 லட்சம் திர்ஹம்ஸ் விதிக்கப்பட்டிருந்த நிலையில் அமீரகத்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, 2 லட்சம் திர்ஹம்ஸ் தொகையை அளித்திருக்கிறது. மீதித் தொகையை தள்ளுபடி செய்வதாக அஸ்தர் மருத்துவமனை பெருந்தன்மையுடன் அறிவித்தது. இதற்கெல்லாம் காரணமாக இருந்தவர் தன்னார்வலரான நசீர் வதனப்பள்ளி ஆவார்.

வெண்டிலேட்டருடன் பயணிக்க வேண்டிய நிலையில் இருந்த மொய்தீன் குறித்துக் கேள்விப்பட்ட துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் உடனடியாக அவரை சொந்த ஊருக்கு அனுப்பும் வேலையில் இறங்கியது.

கடந்த சனிக்கிழமையன்று ஒரு மருத்துவர், செவிலியர் உடன் மொய்தீன் பத்திரமாக ஏர் இந்தியா விமானத்தில் தாயகம் திரும்பினார். இவர்களுடைய பயணச் செலவு அனைத்தையும் துணைத் தூதரகமே ஏற்றிருக்கிறது.

கேரளாவின் பெரிந்தல்மன்னா பகுதியில் அமைந்துள்ள EMS நினைவு கோ-ஆப்பரேட்டிவ் மருத்துவமனையில் மொய்தீன் தனது சிகிச்சையைத் தொடரவுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய இந்திய துணைத் தூதரகத்தின் பத்திரிகை செய்தி மற்றும் கலாச்சார அதிகாரியான டாடு மாமு,” அவர்களுடைய PCR பரிசோதனை உட்பட அனைத்து பயண செலவுகளையும் நாங்கள் ஏற்றுக்கொண்டோம். இத்தனை பெரிய தொகையை தள்ளுபடி செய்த அஸ்தர் மருத்துவமனைக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்திய மக்கள் நல நிதியில் இருந்து இந்த பயணத்திற்கு செலவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Moideen
0 Shares
Share via
Copy link