இந்த வருடத்திற்கான முதல் பிக் டிக்கெட் வெற்றியாளராக இந்தியாவைச் சேர்ந்த அப்துஸ்ஸலாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும் பிக் டிக்கெட் நிர்வாகத்தால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் சமூக மக்கள் அவரைத் தொடர்புகொள்ள உதவுமாறு பிக் டிக்கெட் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், 28 வயதான அப்துஸ்ஸலாம் ஓமான் தலைநகரான மஸ்கட்டில் வசிப்பது தெரியவந்திருக்கிறது. தனது மொபைல் எண்ணிற்கு முன்பு +968 என்ற ஓமானின் கோட் (Code)-ஐ அளிப்பதற்குப் பதிலாக இந்தியாவின் +91 ஐ அளித்தது தான் இத்தனை சிக்கலுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது.
கடந்த 6 வருடமாக மஸ்கட்டில் வசித்துவரும் அப்துஸ்ஸலாம், அங்கு ஷாப்பிங் செண்டர் ஒன்றை நடத்தி வருகிறார். தனது நண்பர்களுடன் இணைந்து இந்த முறை பிக் டிக்கெட்டில் கலந்துகொண்டதாகவும் பரிசுத்தொகையை அவர்களுடன் பங்கிட்டுக்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்பு 4 அல்லது 5 முறை பிக் டிக்கெட்டில் அப்துஸ்ஸலாம் கலந்துகொண்டிருந்தாலும் அதிர்ஷ்டம் இப்போதுதான் அவருக்குக் கிடைத்திருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி 323601 எனும் எண் கொண்ட டிக்கெட்டை அவர் வாங்கியிருக்கிறார்.
கொண்டாட்ட காலம்
அப்துஸ்ஸலாமுடைய வாழ்வில் அடுத்தடுத்து மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது ஜாக்பாட்டைத் தட்டித் தூக்கியிருக்கும் அவர், பிறந்து 3 மாதங்களே ஆன தன்னுடைய இரண்டாவது ஆண் குழந்தையை தூக்க ஆர்வத்தோடு உள்ளார்.
கொரோனா பீதி காரணமாக தனது மகள் மற்றும் கர்ப்பிணியாக இருந்த மனைவியை தனது சொந்த ஊரான கோழிக்கோட்டிற்கு அனுப்பியிருக்கிறார் அப்துஸ்ஸலாம். இன்னும் சில நாட்களில் அவரது குடும்பம் ஓமானுக்கு திரும்பிச்செல்ல இருக்கிறது.
தனக்குக் கிடைத்த பரிசுத் தொகையைக்கொண்டு திருமணம் செய்ய வசதியில்லாத மக்களுக்கு உதவ இருப்பதாக அப்துஸ்ஸலாம் தெரிவித்தார்.