ஒரு இந்திய குடும்பத்தினர் தங்கள் வளர்ப்பு கிளியின் உடைந்த காலை சரி செய்ய 7,000 திர்ஹம்ஸுக்கு அதிகமாக செலவழித்துள்ளனர்.
ஆனால் தற்போது பால்கனி கதவு வழியாக அவர்களது வளர்ப்பு கிளி பறந்து சென்றுவிட்டது. தங்களது கிளியை பாதுகாப்பாக பெற்றுத்தருபவர்களுக்கு 4 ஆயிரம் திர்ஹம்ஸ் வழங்க இருப்பதாக கிளியின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளியின் உரிமையாளர் அருண் குமார் கூறுகையில், “மித்து என்று செல்லமாக அழைக்கப்படும் தங்களின் அன்பான ஆப்பிரிக்க கிளி பர் துபாயில் உள்ள எங்களது வீட்டிலிருந்து நேற்று காணாமல் போய்விட்டது. இதனால் மிகவும் கலக்கமடைந்துள்ளோம். அந்த கிளி எங்களுடன் 12 ஆண்டுகளாக ஒரு குடும்ப உறுப்பினர் போல இருந்தது. அது இல்லாமல் எவ்வாறு நாங்கள் இருக்க போகிறோம் என்று தெரியவில்லை. எனது பெற்றோர்கள் கிளியை மிகவும் விரும்புவார்கள்” என்று அருண் குமார் கூறினார்.
நேற்று காற்று கடுமையாக இருந்ததால், கிளி வெகுதூரம் சென்றிருக்கும். அதைக் கண்டுபிடித்து தருபவருக்கு 4 ஆயிரம் திர்ஹம்ஸ் பரிசு வழங்கவுள்ளோம். கிளி இடது காலில் ஒரு வெள்ளி பட்டையில் தொலைபேசி எண் உள்ளது என்று அவர் கூறினார்.
அந்த கிளி கடந்த ஆண்டு மின்விசிறியில் அடிப்பட்டதால் காலில் பலத்த காயம் ஏற்பட்டது, அப்போது அதற்கு 7 ஆயிரம் திர்ஹம்ஸுக்கும் மேல் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு உயிர் பிளைத்தது.
ஆப்பிரிக்க கிரே கிளியான இது, மிகவும் பிரபலமான பறவைகளில் ஒன்றாகும். அக்கிளிகள் நீண்ட ஆயுள் காலமும், பேசும் திறனும் கொண்டது.
